• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

நாமலின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

Byadmin

Nov 19, 2026


சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்குத் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணையை இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (18) புதன்கிழமை இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நாமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த சீராய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த பிணை உத்தரவை இடைநிறுத்தி இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் உள்ள காணியை இந்திய நிறுவனமான கிரிஷ் நிறுவனத்திற்கு ஒதுக்கிக் கொடுப்பதற்காக ரூ. 70 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்‌ஷவுக்கு, கடந்த 03 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம பிணை வழங்கியிருந்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149(1) பிரிவின் கீழ், தனது பெற்றோர் இருவரினதும் கடுமையான சுகவீன நிலையை விதிவிலக்கான காரணங்களாகக் கருதி, தலா 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் நீதவான் அவரை விடுவித்திருந்தார். இதனை எதிர்த்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த சீராய்வு மனுவிலேயே இன்றைய தினம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

By admin