வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏவுடன் இணைந்து சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ள பனிச்சறுக்கு சுற்றுலாத் தலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்ற இந்தப் பயணத்தின் போது, தனது மகள் பனிச்சறுக்கு விளையாடுவதை அவர் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்துள்ளார்.
வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில், சீன எல்லைக்கு மிக அருகே உள்ள சாம்ஜியோன் சுற்றுலா மண்டலத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்களில் அங்கு சென்ற வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், புதிதாகக் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள், தங்கும் அறைகள் மற்றும் சுற்றுலா ரயில் பாதை ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
விடுதிகளின் தரம் மிகச்சிறப்பாக இருப்பதாகப் பாராட்டிய அவர், விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் சாம்ஜியோன் விமான நிலையத்தின் ஓடுபாதையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு, சாம்ஜியோன் நகரில் உள்ள புக்போட்டே மலை பனிச்சறுக்கு தளத்திற்கு குடும்பத்தினருடன் கிம் ஜாங் உன் சென்றுள்ளார். அங்கு வெள்ளை நிறப் பனிச்சறுக்கு உடை அணிந்திருந்த அவரது மகள் கிம் ஜூ ஏ, பனிப்பரப்பில் மிகுந்த உற்சாகத்துடன் சறுக்கி விளையாடியுள்ளார்.
பனிப்பரப்பில் போடப்பட்டிருந்த பிரத்யேக நாற்காலியில் அமர்ந்தபடி, தனது மகள் விளையாடுவதை கிம் ஜாங் உன் புன்னகையுடனும் ஆர்வத்துடனும் கண்டு இரசித்துள்ளார். இந்தப் பயணத்தில் அவரது மனைவி ரி சோல் ஜூ மற்றும் சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.
கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் முக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருவது, வட கொரியாவின் அடுத்த வாரிசாக அவர் தயார்படுத்தப்படுகிறார் என்ற சர்வதேச ஊகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
The post மகள் பனிச்சறுக்கு விளையாடுவதைப் புன்னகையுடன் ரசித்த கிம் ஜாங் உன்! appeared first on Vanakkam London.