• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

“அச்ச உணர்வு, பதற்றம்”; ரியாத்தில் ஹூத்தி தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்கள் எப்படி உள்ளனர்?

Byadmin

Oct 15, 2026


சவுதி தமிழர்களின் நிலை என்ன?

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபியாவை நோக்கி மேற்கொண்ட தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளில் வாழும் வெளிநாட்டு சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சௌதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது கடந்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

சௌதியில் உள்ள தமிழர்கள் பலரிடமும் பிபிசி தமிழ் அங்குள்ள நிலைமைகள் குறித்து தெரிந்து கொள்ள பேசியது. ஏவுகணை தாக்குதல்கள் குறித்து அரசின் எச்சரிக்கை செய்திகள் வரும் நேரத்தில் யாரும் வெளியில் வருவதில்லை எனவும், பிற நேரங்களில் அன்றாட வாழ்க்கை எப்போதும் போல் தொடர்கிறது என்றும் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது தாக்குதலில் ரியாத் விமான நிலைய பயணிகள் முனையத்தின் ஒரு பகுதியில் ஏவுகணை தாக்கியது. இதில் பாகிஸ்தான் குடியிருப்பாளர் ஒருவர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்தனர். இதற்கு முந்தைய நாள் அதே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு ஏமனின் ஹூத்தி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ரியாத் மட்டுமின்றி கிழக்கு சௌதியில் உள்ள தம்மாம் விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிலையங்களும் குறிவைக்கப்பட்டதாக, ஹூத்தியின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி அன்று, ஏமன் தலைநகர் சனாவில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலிலிருந்து புகை எழுகிறது.

படக்குறிப்பு, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி அன்று, ஏமன் தலைநகர் சனாவில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலிலிருந்து புகை எழுகிறது.

“ஆன்லைனில் வகுப்புகள், வீட்டிலிருந்து அலுவலக வேலைகள்”

ரியாத்தில் வசிக்கும் மருத்துவர் பஷீர் அஹ்மது (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள சூழலைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசுகையில், “சௌதி மீது ஏவப்படும் ஏவுகணைகளை வானில் கண்ணால் பார்க்க முடிகிறது. போர் சூழலில் இருக்கும் யாருக்கும் இயல்பாக எழும் அச்ச உணர்வு உள்ளது, பதட்டமாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான ஏவுகணைகளை சௌதி அரசு தடுத்து விடுகிறது. அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிக்கக்கூடிய வகையில் சூழல் இல்லை. நான் தினமும் என் மருத்துவமனைக்கு வருகிறேன், நோயாளிகளும் எப்போதும் போல் வருகிறார்கள். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளன. பெரும்பாலான அலுவலகங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளன. ஆபத்து வரும் போது, அரசிடமிருந்து எச்சரிக்கை அனைவரது செல்போன்களுக்கும் வரும், அப்போது வெளியில் வரக் கூடாது,” என்றார்.

By admin