தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பூதாகாரமாகியுள்ளது. மேலும், கொலை, கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இது மட்டுமின்றி ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.
அந்த வகையில், துறையூர் எம்எல்ஏ-வும், துணை சபாநாயகருமான ரவி சங்கர், சில கோரிக்கைகளுடன் வந்த நபரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் இதன் காரணமாக ஆட்சியர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த இரு விவகாரங்களும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்:
இந்த சர்ச்சைக்களுக்கு மத்தியில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒழுங்கு
நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று (நவ. 11) நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இக்கூட்டத்தில் தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த கூட்டத்தில், எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை தடுப்பது, பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது, கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
சட்டம் ஒழுங்கு விவகாரம்:
முன்னதாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் நேற்று (நவ. 10) ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலர் சாய்குமார், உள்துறை செயலர் கார்த்திக், டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அன்பு, உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரே நாளில், 14 கொலைகள் நடந்தது குறித்து, அதிகாரிகளிடம் முதலமைச்சர் விளக்கம் கேட்டார். இதற்கு அதிகாரிகள், எட்டு கொலைகள் மட்டுமே தீபாவளி நாளில் நடந்ததாக கூறினர். கொலைகளுக்கான காரணங்களையும் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.