அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யபாமா ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினர்.
இவர்கள் அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்களாக இருந்தனர்.
பின்னர் மூவரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவில் இரண்டு அணிகள் உருவாகின. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.
படக்குறிப்பு, ஜெயக்குமார், மரகதம் குமரவேல்
காரணம் என்ன?
“இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?” என மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேலின் கணவர் குமரவேலிடம் பிபிசி தமிழ் பேசியது.
திருப்போரூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக குமரவேல் உள்ளார்.
“கட்சியின் பிளவு ஏற்பட்டுவிட்டதுதான் காரணமாக உள்ளது. அ.தி.மு.கவில் இரண்டு பக்கமும் பிரச்னை நடந்து வருகிறது. தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பதால் த.வெ.க பக்கம் சென்றால்தான் தீர்வு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்கிறார்.
த.வெ.கவில் இணைவது உறுதியாகிவிட்டதா எனக் கேட்டபோது, “அதைப் பற்றி முறையாக அறிவிப்பு வெளிவரும்” என்கிறார்.
“த.வெ.க அரசை ஆதரித்து வாக்களித்ததால் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்பதுதான் ராஜினாமா செய்வதற்கு காரணமா?” என பிபிசி தமிழ் கேட்டது.
“அது காரணம் அல்ல. இப்போதும் அவர் (பொதுச்செயலாளர்) அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார். அங்கு சென்றால் தகுதிநீக்கம் இருக்காது. கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக த.வெ.க அரசுக்கு எனது மனைவி ஆதரவு கொடுத்தார்” என்கிறார்.
தொடர்ந்து பேசும்போது, “இதையே காரணமாக வைத்து, மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இதுதான் ஒரே முடிவு” எனக் கூறுகிறார்.
பட மூலாதாரம், DIPR
படக்குறிப்பு, சி வி சண்முகம் அலுவலகத்தில் அதிமுக எம் எல் ஏக்கள் ஒரு பகுதியினரை சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்
அதிமுகவில் என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவையே காட்டுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை மற்றும் கட்சி நிர்வாகம் என இரு வேறு நிலைகளில் அதிமுக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அடங்கிய தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரி வருகிறது.
தவெக அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ஊகங்கள் வெளியான நிலையில், அவர்கள் இல்லாமல் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவை அமைந்தது.
இந்த நிலையில் சி.வி சண்முகம் எஸ்.பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களில் ஒரு சிலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் எதிர்தரப்பை சேர்ந்த மூவர் ராஜினாமா செய்துள்ளனர்.
பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சி.வி. சண்முகம் முன்னதாக கோரிய நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.
அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர், கொறடா நியமனம் மற்றும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கக் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும், பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும் தமிழக அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டு வருகிறது.
பட மூலாதாரம், AIADMK
படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள்
விஜய் ஆட்சியில் என்ன நிலை?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.
ஆனால், ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாததால் அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் த.வெ.கவுக்கு ஆதரவளித்தன. இதன்மூலம் த.வெ.க அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.
பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க அரசுக்கு ஆதரவளித்தனர்.
இரு இடங்களில் போட்டியில்ல முதல்வர் விஜய், ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.
இந்த மூன்று தொகுதிகளுக்கும், முதல்வர் விஜய் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.