பட மூலாதாரம், Reuters/Getty Images
-
- எழுதியவர், ஷான் யுவான்
- மற்றும்
- எழுதியவர், ஜேக் லாவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு மற்றும் ராணுவ விமானங்களின் அணிவகுப்புடன் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்.
இது 11 ஆண்டுகளில் அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாகும்.
ஆனால், சீனாவின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக அவர் உருவெடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அமெரிக்காவுடனான அவரது முதல் சந்திப்பு நடந்துவிட்டது.
நான்கு தசாப்தங்களுக்கு முன்பு, ஷி ஜின்பிங் நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த ஒரு மாவட்ட அதிகாரியாக, அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் நிலவும் சூழலை நேரில் அறிந்துகொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டார்.
அயோவா மாகாணத்தில் சில நாட்கள் தங்கிய அவர், விவசாயம் குறித்து அறிந்துகொண்டதுடன், பண்ணைகளையும் பார்வையிட்டார். புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளூர் குடும்பத்தினருடன் தங்கினார்.
ஷி ஜின்பிங் அமெரிக்காவுடன் வைத்துள்ள தனிப்பட்ட தொடர்புகளைச் சுட்டிக்காட்டும் வகையில், அவர் அங்கு தங்கியிருந்த நிகழ்வையும், அயோவா மாகாணத்தின் அப்போதைய ஆளுநரும் (பின்னர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் சீனாவிற்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவருமான) டெர்ரி பிரான்ஸ்டாட் உடனான அவரது நட்பையும் சீன அரசு ஊடகங்கள் முன்னிலைப்படுத்தின.
இன்று, அமெரிக்கா-சீனா உறவுகள் முற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. உலகளாவிய ஆதிக்கத்திற்கான போட்டி, பதிலடி நடவடிக்கையாக விதிக்கப்படும் வரிகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் ராணுவ ரீதியிலான மோதல்கள் ஆகியவை இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வரையறுக்கின்றன.
73 வயதான ஷி ஜின்பிங் இப்போது ஒரு கீழ்மட்ட அதிகாரி அல்ல. சீனாவின் தலைவராகப் பொறுப்பேற்ற கடந்த 14 ஆண்டுகளில், அவர் கம்யூனிஸ்ட் கட்சியையும், உலக அரங்கில் சீனாவின் நிலையையும் முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளார்.
அனைத்தையும் இழந்த ‘இளவரசர்’
பட மூலாதாரம், Reuters
ஷி ஜின்பிங்கின் வாழ்க்கை, வசதியான பின்னணியில் தொடங்கியது.
1953-இல் பெய்ஜிங்கில் பிறந்த அவர், சீன மக்கள் குடியரசை உருவாக்க உதவிய கம்யூனிஸ்ட் புரட்சியாளரான ஷி சோங்ஷுனின் ஆறாவது குழந்தை ஆவார். இவரது தந்தை காலப்போக்கில் கட்சியின் மூத்த தலைவராகவும், துணைப் பிரதமராகவும் உயர்ந்தார்.
சிறுவயதில், ஷி ஜின்பிங் புகழ்பெற்ற உயர்தரப் பள்ளிகளில் பயின்றதோடு, பெரும்பாலான குடும்பங்களுக்குக் கிடைக்காத பல்வேறு சிறப்பான சலுகைகளையும் அனுபவித்தார்.
ஆனால், திடீரென அரசியல் சூழல் அவரது குடும்பத்திற்கு எதிராக மாறியது.
1960-களின் தொடக்கத்தில், ஷி ஜின்பிங்கின் தந்தை “கட்சி எதிர்ப்பு” கும்பலின் அங்கமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவர் கிராமப்புறத்திற்கு நாடு கடத்தப்பட்டு ஒரு தொழிற்சாலையில் பணிபுரிய நேர்ந்ததுடன், கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
“புரட்சிக்கு எதிரானவர்” எனக் குறிக்கப்பட்ட ஒருவரின் மகன் என்பதால், பதின்பருவத்தில் இருந்த ஷி, ஒரு மறுபயிற்சி மையத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டார்.
அன்றைய தலைவர் மாவோ சேதுங், “கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்” என விடுத்த அழைப்பை ஏற்று, 15 வயதான ஷி ஜின்பிங் லட்சக்கணக்கான பிற நகர மாணவர்களுடன் கிராமப்புறங்களை நோக்கிப் புறப்பட்டார்.
2004-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் தனது பயணத்தை விவரித்த அவர், “ரயிலில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர். நான் மட்டுமே புன்னகைத்துக் கொண்டிருந்தேன். நான் அங்கிருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் அழுதிருப்பேன். நான் அங்கேயே தங்கியிருந்தால், நான் இன்னும் உயிருடன் இருப்பேனா என்று கூட எனக்குத் தெரியாது” என்றார்.
சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தின் தொலைதூர மலைக்கிராமமான லியாங்ஜியாஹேவுக்கு அவர் சென்றடைந்தார். அங்கு ஏழு ஆண்டுகள் மலைச்சரிவில் குடையப்பட்ட குகை வீட்டில் வசித்தார்.
விவசாயப் பணிகளில் ஈடுபட்டதுடன், கால்நடைச் சாணத்தைச் சுமந்தும் வாய்க்கால்களைத் தோண்டியும் பணியாற்றினார்.
அங்கு கழித்த காலத்தைப் பற்றி அவர் கூறுகையில், “காய்கறி ஊறுகாய்களே எனக்கு மிகவும் பிடித்த உணவாக மாறியது. இன்றைக்கும் கூட அதை நான் மிகவும் அன்புடன் நினைவுகூர்கிறேன்” என்றார்.
அங்கிருந்த வேலைப்பளுவைக் கண்டு அவர் “திகைத்துப்போனதாக” கூறினார். ஆரம்பத்தில் பசி மற்றும் உண்ணிகளால் அவதிப்பட்டார். ஆனால் மதிய உணவுக்கு முன்பு கிடைத்த புகைப்பிடிக்கும் இடைவேளைகள் அவருக்கு ஓரளவு நிம்மதி அளித்தன.
அதிகாரத்தை நோக்கிய வளர்ச்சி
சீனாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான சிங்குவா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் படிப்பதற்காக, அவர் தனது 22வது வயதில் கிராமப்புறத்தை விட்டு வெளியேறினார்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, பெய்ஜிங்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஃபூஜியான் மற்றும் செஜியாங் ஆகிய கடலோர மாகாணங்களில் உள்ளூர் அதிகாரியாகப் பணியாற்றினார். இந்த மாகாணங்கள் 1980-களில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு சீனாவின் செல்வமிக்க மாகாணங்களாக உருவெடுத்தன.
மாவோ சேதுங்கின் மறைவுக்குப் பிறகு, ஷி ஜின்பிங்கின் தந்தை மீதான பழிகள் நீக்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதன் மூலம், ஷி ஜின்பிங் மத்திய அரசு மற்றும் ராணுவத்தில் முக்கியப் பதவிகளைப் பெற முடிந்தது. இது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அவருக்கு பல தொடர்புகளை உருவாக்க உதவியது.
அப்போது அவருக்கு அறிமுகமான பல அதிகாரிகள், பின்னர் அவரது நம்பிக்கைக்குரிய தலைமை வட்டத்தின் முக்கிய உறுப்பினர்களாக மாறினர்.
பட மூலாதாரம், EPA
ஷி ஜின்பிங், 1979-இல் பிரிட்டனுக்கான முன்னாள் தூதரின் மகளான கே லிங்லிங் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.
பின்னர், ஒரு பொதுவான நண்பர் மூலமாக அறிமுகமான பெங் லியுவானை ஷி ஜின்பிங் திருமணம் செய்துக்கொண்டார். பெங் லியுவான் ஒரு ராணுவ நாட்டுப்புறப் பாடகி ஆவார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்படும் சந்திரப் புத்தாண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடியதன் மூலம், அவர் ஏற்கனவே சீனா முழுவதும் பிரபலமாகியிருந்தார்.
1980-கள் மற்றும் 1990-களில் வாழ்ந்த பல சீனர்களுக்கு, ஷி ஜின்பிங்கை விட அவர் திருமணம் செய்துகொண்ட பெங் லியுவானையே அதிகம் தெரிந்திருந்தது.
சீனாவின் முதல் பெண்கள் பொதுவெளியில் குறைவாகத் தோன்றும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து மாறுபட்டு, பெங் லியுவான் பெரும்பாலும் ஷி ஜின்பிங்கின் வெளிநாட்டுப் பயணங்களில் அவருடன் சென்றார்.
இவர்களின் ஒரே மகளான ஷி மிங்சே 1992-இல் பிறந்தார். அவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார் என்பதைத் தவிர அவரைப் பற்றி வேறு விவரங்கள் அதிகம் அறியப்படவில்லை.
2007-இல், ஷாங்காய் நகரத்தின் உயர்மட்டத் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, சீனாவின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான பொலிட்பீரோ நிலைக் குழுவில் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஹு ஜின்டாவிற்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார்.
சீனாவின் தலைவராக, ஷி ஜின்பிங் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளை, மிகச் சிலரே எதிர்பார்த்த வழிகளில் முற்றிலும் மாற்றியமைத்தார்.
ஷி ஜின்பிங்கின் கீழ் மாறிய சீனா
2012 முதல் ஷி ஜின்பிங்கின் தலைமையின் கீழ் சீனா மேலும் மேலும் வளர்ந்துள்ளது.
வெளிநாடுகளில், ‘பெல்ட் அண்ட் ரோடு’ போன்ற பிரமாண்ட திட்டங்களின் மூலம் சீனா தனது உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தியது. அதே நேரத்தில், பெய்ஜிங் உலகளாவிய தெற்கில் தனது செல்வாக்கை அதிகரித்து, தன்னை பாதுகாவலராக நிலைநிறுத்த முயன்றது.
அதே நேரத்தில், தென் சீனக் கடலில் அதிகரிக்கும் பதற்றங்கள், தைவான் மீது அதிகரிக்கும் அழுத்தம் மற்றும் அமெரிக்காவுடனான கடுமையான போட்டி உள்ளிட்ட பல காரணங்களால், சீனாவுக்கும் பல ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
ஆனால், சீனாவுக்குள் அதிகரித்த அரசியல் கட்டுப்பாடும் ஷியின் ஆட்சியின் முக்கிய அம்சமாக உள்ளது.
ஷி ஜின்பிங்கின் ஆட்சியின்கீழ், சீனா பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களில் அவர் அறிமுகப்படுத்திய நடவடிக்கைகள் ஒழுங்கை மீட்டெடுத்துள்ளதாக ஆதரவாளர்கள் கூறும் அதே வேளையில், விமர்சகர்களோ இவை குடிமக்களின் உரிமைகளை வெகுவாகப் பறித்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர் தனது பெயரால் அழைக்கப்படும் ஒரு சித்தாந்தத்தை முன்னெடுத்தார். “புதிய சகாப்தத்திற்கான சீனப் பண்புகளுடனான சோசலிசம் குறித்த ஷி ஜின்பிங் சிந்தனை” – இது அவருக்கு முந்தைய இரு ஆட்சியாளர்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.
இரண்டு பதவிக் காலங்களுக்கு மேல் பதவி வகிக்க அனுமதிக்கும் வகையில், ஷி ஜின்பிங் 2018-இல் அரசியலமைப்புத் திருத்தம் மூலம் அதிபரின் பதவிக் கால வரம்புகளையும் நீக்கினார்.
சீன அரசு ஊடகங்கள் ஷி ஜின்பிங்கை ஒரு கடுமையான மற்றும் அமைதியான மனிதராகச் சித்தரிக்கின்றன. ஆனால் அவர் சில சமயங்களில் தனது நகைச்சுவையான பக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கால்பந்து விளையாட்டின் மீதான தனது விருப்பத்தைப் பற்றிப் பேசியுள்ளார். தாய்லாந்து பிரதமரிடம் சீன ஆண்கள் கால்பந்து அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாடுகள் குறித்து நகைச்சுவையாகக் கூடச் சாடியுள்ளார். முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் பீர் அருந்தியுள்ளார். மேலும் தென்கொரிய அதிபருக்கு சீனத் தயாரிப்பான ‘ஷியோமி’ போன்களைப் பரிசளித்தபோது, அவற்றில் ஏதேனும் “ரகசிய கண்காணிப்பு அமைப்புகள்” உள்ளனவா என்று பரிசோதித்துக் கொள்ளுமாறு விளையாட்டாகக் கிண்டல் செய்துள்ளார்.
நண்பர்களா அல்லது எதிரிகளா?
பட மூலாதாரம், AFP via Getty Images
வெளிநாட்டுத் தலைவர்களுடனான ஷி ஜின்பிங்கின் உறவுகள், சீனாவின் பரந்த வெளியுறவுக் கொள்கைகளின் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விட வேறு எந்த வெளிநாட்டுத் தலைவரும் அவருக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. ஷி ஜின்பிங் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர்கள் 40 முறைக்கு மேல் சந்தித்துள்ளனர். மேலும் புதினைத் தனது “மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்” என்று கூட ஷி ஜின்பிங் வர்ணித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்புடனான அவரது உறவு மிகவும் சிக்கலானது. சீனா மீது வர்த்தகப் போரைத் தொடுத்தபோதிலும், டிரம்ப் அடிக்கடி ஷி ஜின்பிங்கைப் பற்றி அன்புடன் பேசுவதுடன், அவரை ஒரு நண்பர் என்றும் அழைத்து, அவரது அரசியல் பலத்தையும் பாராட்டி வருகிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன், ஷி ஜின்பிங் ஆரம்பத்தில் தனிப்பட்ட ராஜ்ஜிய உறவில் அதிகம் கவனம் செலுத்தினார். ஆசியாவின் இந்த இரு பெரும் சக்திகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலியுறுத்த அவர்கள் முறைசாரா சந்திப்புகளை நடத்தினர். ஆனால், 2020-இல் ஏற்பட்ட உயிரிழப்புடன் கூடிய எல்லை மோதல்கள், இரு நாடுகளின் உறவை பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளின.
தனிப்பட்ட வசீகரம் அல்லது திடீர் முடிவுகளுக்குப் பெயர் பெற்ற தலைவர்களைப் போல அல்லாமல், தனிப்பட்ட உறவுகளுக்கு அரசின் நலன்களை விட ஷி அரிதாகவே முன்னுரிமை அளிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு