பட மூலாதாரம், Cincinnati Zoo
-
- எழுதியவர், மேடலின் ஹால்பர்ட்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், ஃபியோனா என்ற பெண் நீர்யானை கீழே விழுந்த தொப்பி ஒன்றை விழுங்கியது.
இதையடுத்து, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஃபியோனா உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“ஃபியோனாவைக் காப்பாற்ற கால்நடை மருத்துவர்களும் உயிரியல் பூங்கா ஊழியர்களும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். எனினும், அதன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று வியாழக்கிழமை (நவம்பர் 19) பிற்பகலில் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு குறைப்பிரசவமாகப் பிறந்த ஃபியோனா, பின்னர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது.
சுமார் 10 நாட்களுக்கு முன்பு தொப்பி ஒன்றை விழுங்கியதைத் தொடர்ந்து ஃபியோனாவுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டது.
ஃபியோனாவைக் காப்பாற்ற கால்நடை மருத்துவ ஊழியர்கள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், ஆனால் அவை பலனளிக்கவில்லை என்றும் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில் ஃபியோனாவுக்கு உடல்நலக் குறைவுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அதன் உடல் பெரிதாக இருப்பதால், சிறிய தொப்பி எளிதில் செரிமானமாகி கழிவுடன் வெளியேறிவிடும் என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் கருதியது.
பட மூலாதாரம், Getty Images
எனினும், சில நாட்களுக்குப் பிறகு ஃபியோனா உணவு உட்கொள்வது குறையத் தொடங்கியது. இதனால், அதற்கு அவசரமாகச் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
தொப்பி செரிமான மண்டலம் வழியாக வெளியேறுவதற்கு உதவும் வகையில், ஃபியோனாவுக்கு உணவு அளிக்க உயிரியல் பூங்கா ஊழியர்கள் முயன்றனர்.
சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் குறைப்பிரசவமாகப் பிறந்த ஃபியோனா, தனது வாழ்க்கையின் தொடக்க நாட்களில் உயிர் பிழைப்பதற்குப் போராடியது.
ஃபியோனாவின் நம்பிக்கையூட்டும் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு வகை ஐஸ்கிரீம் சுவை ஒன்று உருவாக்கப்பட்டது. சின்சினாட்டி பாலே நடனக் குழுவின் நிகழ்ச்சியிலும் ஃபியோனாவை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரம் இடம்பெற்றது.
உயிரியல் பூங்காவுக்கு வந்த பார்வையாளர் ஒருவர் தொப்பியை மேல்நோக்கி வீசியுள்ளார். அது மேற்கூரை மின்விசிறியில் பட்டு, சிறிய துளை வழியாகக் கீழே விழுந்து ஃபியோனா அருகில் சென்றதாக உயிரியல் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் மிஷெல் கர்லி அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“நாங்கள் மீண்டும் அதேபோன்று செய்ய முயன்றாலும், அது சாத்தியமாகாது” என்று கர்லி கூறினார்.
ஃபியோனா விரைவாகக் குணமடைய உதவும் வகையில் உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்குத் திரவ உணவுகளை வழங்கினர். அல்ட்ராசவுண்ட் பரிசோதனையும் மேற்கொண்டனர்.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், ஃபியோனாவின் சிறுகுடல் வழியாகத் தொப்பி நகர்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அதன் உடலில் நீர்ச்சத்து தொடர்ந்து குறைவாக இருந்ததாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
“முழுமையாக வளர்ந்த நீர்யானைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சாத்தியமில்லை. எனவே, ஃபியோனாவின் உடலில் இருந்து தொப்பி இயற்கையாகவே வெளியேறுவதற்கு அனுமதிப்பதே சிறந்த வழியாக இருந்தது” என்று உயிரியல் பூங்கா ஊழியர் ஒருவர் கூறினார்.
ஃபியோனாவைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், அவை பலனளிக்கவில்லை என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தற்போது நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். இந்தச் சம்பவம் இப்படி முடியும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஃபியோனா கடைசி வரை போராடியது” என்று சின்சினாட்டி உயிரியல் பூங்காவின் இயக்குநர் டேவ் ஜென்னிக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
2017ஆம் ஆண்டு பிறந்த ஃபியோனாவின் எடை அப்போது 13 கிலோ மட்டுமே இருந்தது.
மிகக் குறைந்தயுடன் பிறந்த இந்த வகை நீர்யானைகளில் இதற்கு முன்பு பதிவானதை விட பாதி அளவே ஃபியோனாவின் எடை இருந்ததாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பிறந்தபோது ஃபியோனா மரணத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போராடியது. அதே மன உறுதியுடன் இந்தப் பாதிப்பிலிருந்தும் அது மீண்டு வரும் என்று நாங்கள் நம்பியிருந்தோம்” என்று உயிரியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
மனிதர்களின் பராமரிப்பில் வாழும் நீர்யானைகள் பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. எனவே, ஃபியோனாவின் மரணம் எதிர்பார்த்ததைவிட மிகவும் முன்கூட்டியே நிகழ்ந்துவிட்டதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்தச் சம்பவம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஃபியோனாவின் மரணம் ஒரு துயரமான சம்பவம். விலங்குகளை அனைவரும் அக்கறையுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்ற செய்தியை இது உணர்த்துகிறது” என்று விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டாவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் வனவிலங்குகள் பிரிவின் நிர்வாக இயக்குநர் டெபி மெட்ஸ்லர் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு