மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிக்குள் அனுமதியின்றி நுழைந்து, மாணவர்களிடம் கேள்வி கேட்டு இடையூறு ஏற்படுத்திய புகாரின் பேரில் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார்
புகாரின்படி, ஆகஸ்ட் 20 அன்று பிற்பகல் 1 மணியளவில் அபிஜித் திப்கே மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் ஔசா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். அனுமதியின்றி வகுப்பறைகளுக்குள் சென்ற அவர்கள், மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கே நேரத்தைச் செலவிட்டுள்ளனர். மேலும் வகுப்பறை நிகழ்வுகளைப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
வாக்குவாதம்
பள்ளியில் முழுமையான வருகைப்பதிவு மற்றும் சிறப்பான சூழல் இருப்பது போலக் காட்டுவதற்காக வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை இந்த பள்ளியின் வகுப்பறையில் அமர வைத்தது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் சிஜேபினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆசிரியர்களை அவதூறாகப் பேசி, அவர்களைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வைப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஔசா காவல் நிலையப் போலிஸார் அபிஜித் திப்கே உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நாய்களுக்கு நல்ல வசதி
முன்னதாக பள்ளியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.
சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.
போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.
கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள்.
அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம்.
அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
ஆபத்தில் மதம்
அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், “இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது.
ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ராஜினாமா செய்
தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.
அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்” என தீப்கே பதிலளித்தார்.
பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில் சிஜேபி கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.