ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் அடுத்தடுத்து கடற்கொள்ளையர்கள் கடத்திய 2 வணிகக் கப்பல்களில் சிக்கியுள்ள 22 இந்திய மாலுமிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடத்தல்
எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
முன்னதாக எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது.
அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
விளக்கம்
இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், “கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளனர்.
அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று உறுதியளித்துள்ளார்.
சோமாலிய அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மாலுமிகளை மீட்பதற்கான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.
கடத்தப்பட்ட கப்பல்களின் நடமாட்டத்தை சர்வதேச கடற்படைக் கப்பல்களும், டிரோன்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.