பட மூலாதாரம், DMK
-
- எழுதியவர், ப. சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
“திமுக பார்க்காத வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. இந்தத் தேர்தலில்தான் தோல்வியுற்றுள்ளோம் நிரந்தரமாக இல்லை. எதிர்காலத்தை திட்டமிட நமக்கு காலம் கிடைத்திருக்கிறது” என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றினார்.
அவரது இந்தப் பேச்சுக்குப் பிறகு திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் திமுக அமைப்பு ரீதியில் மாற்றம் ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
“நீண்ட நாட்களாக இளைஞர்களுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்காததால் அதற்குறிய விலையை திமுக கொடுத்துள்ளது. தற்போது அதற்கான பரிகாரத்தைத் தேட நினைக்கிறது” என்கிறார் அரசியல் ஆய்வாளர் பேராசியர் ராமு மணிவண்ணன்.
“ஆனால் விளையாட்டில் இளைஞர்கள் பயன்படலாம் அரசியலில் வயது, அனுபவம் இரண்டுமே முக்கியம்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்.
தமிழ்நாடு அரசியல் களத்தில், திமுகவின் தற்போதைய முடிவு அதன் அரசியல் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போதும் தாக்கம் என்ன?
பட மூலாதாரம், DMK
தோல்வியை ஆராய அமைக்கப்பட்ட குழு
கடந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதற்கான காரணங்களைக் கண்டறிய 38 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு அதற்கான அறிக்கையை திமுக தலைமையிடம் வழங்கியது.
இந்தக் குழுவின் அறிக்கைகளை ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மறுசீரமைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தினார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகள்படி, சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியில் அமைப்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
‘திமுக கம்பேக் கொடுக்கும்’ – மு.க.ஸ்டாலின்
பட மூலாதாரம், DMK
தோல்விக்குக் காரணமானவர்களைத் தேடித் தேடி மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனையே தேவை என முடிவெடுத்து இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு, திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். அதற்காக சோர்ந்துவிடாமல் நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
“இதனால் கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்ய உள்ளேன். இது கடுமையானதாகவும் சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். இந்த மாறுதல் அடுத்த நூறு ஆண்டுகள் கட்சியை உயிர்ப்புடன் இருக்கச்செய்யும்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “இளைஞர்கள் பெண்களின் நம்பிக்கையை மீண்டும் பெரும் வகையில் நமது நடவடிக்கை இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பொறுப்பும் பதவியும் வழங்கப் போகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, “ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரை தூங்கி வழிவது சில கட்சிகளின் வழக்கம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சுணங்கிவிடாமல் மக்கள் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் கட்சி திமுக என்பதை எதிரிகளும் சொல்வார்கள். கம் பேக் (ComeBack) கொடுப்பதில் நாம்தான் ஸ்பெஷலிஸ்ட், அதை சிறப்பாகச் செய்வோம்” என்று பேசினார்.
பட மூலாதாரம், CSKoteeswaran
‘இளைஞர்களால் மட்டுமே அரசியலில் சாதிக்க முடியாது’
“திமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணம் வயது மட்டுமின்றி அவர்கள் ஒரே பதவியில் நீட்டிப்பதும்தான், அதை மாற்ற வேண்டுமென அவர்கள் முடிவு செய்திருப்பது வரவேற்கக் கூடியது” என்று தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் உள்ள முக்கிய சவால் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதுதான். தவெக ஆட்சிக்குப் பிறகு அதில் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் புது முகங்களுக்கும் இளைஞர்களுக்கும் திமுக வாய்ப்பு தர நினைக்கிறது” என்று கூறினார்.
ஆனால் இளைஞர்களை முன்னிறுத்தினால் மட்டுமே அரசியலில் வென்றுவிட முடியாது என்று கூறும் கோட்டீஸ்வரன், “திமுக இளஞர்களை முன்னிறுத்தக் காரணம், கட்சியில் ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக அமர்ந்து தானும் செயல்படாமல், கட்சியையும் செயல்பட விடாமல் இருப்பவர்களை மாற்ற வேண்டும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்ற காரணத்தைக் கொண்டுள்ளது” என்கிறார்.
ஆனால் “விளையாட்டில் மட்டும்தான் இளைஞர்களால் சாதிக்க முடியும், அரசியலில் வயதும் அனுபவமும் சேர்ந்தால்தான் முடியும்” என்றும் குறிப்பிட்டார் அவர்.
கட்சியில் இருப்பவர்களில் சிலர் எதிர்க்கட்சியினரைப் பார்த்தால் அணுகுமுறையை மாற்றுவதாகத் தனது கட்சியினர் குறித்தே மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். அது தொடர்பாக விளக்கமளித்த கோட்டீஸ்வரன், “அரசியலில் வியாபாரிகளை அதிகம் சேர்த்தால் அவர்கள் ஆளும் கட்சியினருடன் சேர்ந்து வியாபாரம் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களையும் சேவையாற்ற நினைப்பவர்களையும் சேர்த்தால் அவர்கள் ஆளுங்கட்சியினரை நோக்கிக் கேள்வி எழுப்புவார்கள்” என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், MK Stalin/X
‘இளைஞர்களை சரியாக பயன்படுத்தவில்லை’
அரசியல் ஆய்வாளர் பேராசியர் ராமு மணிவண்ணன் கூற்றுப்படி, கட்சியில் நீண்ட நாட்களாக இளைஞர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளனர், அவர்களுக்குத் தற்போது அங்கீகாரம் வழங்க வேண்டுமென திமுக நினைத்துள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திமுகவில் தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் இருப்பதால் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட வழி வகுக்கப்படுவதை மாற்றி கட்சியில் ஒரு சுழற்சியைக் கொண்டு வர திமுக முடிவெடுத்துள்ளதாக” குறிப்பிட்டார்.
“இரண்டு இடங்களைக் கைப்பற்றுமா என்று சொல்லப்பட்ட தவெக ஆளுங்கட்சியாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இளைஞர்களின் பங்களிப்பு. திமுக-வுக்கு கொள்கை சார்ந்த பிடிப்பு உள்ளது. அதேபோல கொள்கைப் பிடிப்பு சார்ந்த இளைஞர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர். ஆனால் அவர்களை திமுக சரிவர பயன்படுத்தவில்லை” என்று விமர்சித்த அவர், “இதுவரை அவர்களாகவே கட்சிப் பணியாற்றியவர்களை இனி திமுக முன்னிறுத்தி அதன் மூலம் அவர்கள் கட்சி பணியாற்றப் போகிறார்கள்” என்றார்.
ஒரு பாரம்பரியமான கட்சியில் இளைஞர்கள் பதவிக்கு வரும்போதும் அந்தக் கட்சியில் உள்ள கட்டுப்பாடுகள் அவர்களை சரியான பாதையில் பணியாற்ற வழிவகுக்கும் எனக் கூறிய ராமு மணிவண்னன், “நீண்ட நாட்களாக இளைஞர்களுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்காததால் அதற்குறிய விலையை திமுக இந்தத் தேர்தலில் கொடுத்துள்ளது. தற்போது அதற்கான பரிகாரத்தைத் தேட நினைக்கிறது” என்றார்.
பட மூலாதாரம், ThangamThennarasu
‘கட்சிக்கு அவசியமான கட்டுப்பாடுகள்’
திமுகவில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றங்களின் அவசியம் குறித்து தெரிந்துகொள்ள மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் தங்கம் தென்னரசுவை பிபிசி தமிழ் சார்பாகத் தொடர்பு கொண்டோம்.
அப்போது அவர், “இந்தக் குழுவின் தலைவராக இருந்து பரிந்துரைகளை வழங்கியுள்ளதால் தான் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது” என்று மறுத்துவிட்டார்.
மறுபுறம், “கட்சியில் இதுபோன்ற மாற்றங்கள் இருப்பது இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதாக” பிபிசி தமிழிடம் தெரிவித்தார் திமுக செய்தித்தொடர்பு குழு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி.
இதுகுறித்து அவர் பேசுகையில், “பேரறிஞர் அண்ணா திமுக-வை தொடங்கியபோது அணிகள் இல்லை, கலைஞர் காலத்தில்தான் அணிகள் உருவாயின. இப்போது அமைப்பு ரீதியில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது கட்சி காலப்போக்கில் தன்னைச் சரிசெய்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
கூடுதலாக, “தேர்தலுக்கு முன்னரே இது தொடர்பான பரிந்துரை கட்சிக்கு வந்தது. ஆனால் தேர்தல் நேரத்தில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டால், அது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்துமென இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறியதால் அப்போது கைவிடப்பட்டது. இது சரியான நேரம் என்பதால் தலைவர் இதைச் செய்துள்ளார்” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், ANI
9 தீர்மானங்கள் என்ன?
திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 9 தீர்மானங்கள் என்ன?
- கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45, கிளைக் கழகச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுபவர் இரண்டு முறை மட்டுமே அந்தப் பொறுப்பை வகிக்க முடியும்.
- மாநகரப் பகுதிகளில் கிளைச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் அந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர் இரண்டு முறை மட்டுமே அந்தப் பொறுப்பை வகிக்க முடியும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்தக் கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும்.
- சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும். அதுமட்டுமின்றி, மாநகர – நகர – பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படும். அதோடு ஒருவர் இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.
- பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பிலும் ஒருவர் அதிகபட்சமாக, இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும்.
- சென்னை மாநகராட்சியில் 40 ஆயிரம் வாக்காளர்கள், மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி கழகங்கள் உருவாக்கப்படும். பகுதி செயலாளருக்கு அதிக பட்ச வயது 60. மேலும் ஒருவர் இரு முறை மட்டுமே அந்தப் பொறுப்பில் பணியாற்ற முடியும்
- நாற்பது ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கம், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60. ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்
- முப்பது ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்படும். அவரது அதிகபட்ச வயது 60. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அந்தப் பொறுப்பை வகிக்க முடியும்.
- அமைப்பு ரீதியில் உள்ள 77 மாவட்டக் கழகங்களை, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு செய்து 110 மாவட்டக் கழங்களாக மாற்றம். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயம். ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.
- புதிதாக அமையவுள்ள 110 மாவட்டக் கழகங்களை அறிவித்தவுடன், அனைத்து மாவட்டக் கழகங்களிலும் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். கழக மறுசீரமைப்புக் குழுவால் அளிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு மாவட்டத்தின் ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வட்ட – கிளைக் கழக அமைப்புகளை 15 நாட்கள் என்ற காலவரையறைக்குள் உருவாக்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு