• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

அறுவை சிகிச்சைக்கு முன் சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் – எதற்காக தெரியுமா?

Byadmin

Aug 29, 2026


 சூடோகோலினெஸ்டரேஸ் சுரப்பி குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியிடம் மருத்துவர்கள் பொதுவாக உடல்நிலை, மருந்து ஒவ்வாமை, முந்தைய மருத்துவ வரலாறு போன்றவற்றை கேட்பார்கள். ஆனால் சில நேரங்களில், நோயாளி எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மயக்கவியல் நிபுணர்களுக்கு முக்கிய தகவலாக இருக்கலாம்.

காரணம், தெலுங்கு பேசும் ஆர்ய வைஷ்யா அல்லது தமிழ்நாட்டில் காணப்படும் கொமுட்டி செட்டியார்/ வைஷ்ய செட்டி பிரிவினரில் சிலரிடம் காணப்படும் சூடோகோலினெஸ்டரேஸ் (pseudocholinesterase) எனும் சுரப்பி குறைபாடு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த சமூகத்தினர் காணப்படுகின்றனர். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சையின்போது பொதுவாக பயன்படுத்தப்படும் ஸ்கோலின் (Succinylcholine) என்ற தசைத் தளர்வு மருந்தின் தாக்கம் எதிர்பார்த்ததை விட பல மணி நேரங்கள் நீடிக்கக்கூடும் என்பதே இதற்குக் காரணம்.

பெங்களூரு ஹோஸ்மத் மருத்துவமனையில் பணிபுரியும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் சந்தோஷ் சிப்ரே, பிபிசியிடம் பேசுகையில், “அறுவை சிகிச்சைக்கு முன் வழங்கப்படும் மயக்க மருந்துகளில் ஒன்றான ஸ்கோலின், நோயாளியை சிறிது நேரம் மூச்சு விடாமல் இருக்கச் செய்யும். அந்த நேரத்தில் சுவாசக் குழாய் செலுத்தப்படும். வழக்கமாக பத்து நிமிடங்களுக்குள் நோயாளி மீண்டும் தானாக மூச்சுவிடத் தொடங்கிவிடுவார். ஆனால் சூடோகோலினெஸ்டரேஸ் குறைபாடு உள்ளவர்களுக்கு அது பல மணி நேரங்களுக்குப் பிறகுதான் நிகழலாம்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ஸ்கோலின் கொடுத்தால் உயிருக்கு நேரடி ஆபத்து ஏற்படாது. ஆனால் நோயாளி மீண்டும் தானாக மூச்சுவிடும் வரை வெண்டிலேட்டரில் வைத்திருக்க வேண்டி வரும். அவர்களை உடனடியாக மீண்டும் மூச்சுவிடச் செய்யும் தனிப்பட்ட மருந்து எதுவும் இல்லை. இறுதியில் அவர்கள் தாங்களாகவே மூச்சுவிட ஆரம்பிப்பார்கள்,” என்றார்.

டாக்டர் சந்தோஷ் சிப்ரேயின் கூற்றுப்படி, இந்த தன்மை தெலுங்கு பேசும் வைஷ்ய செட்டி சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் அதிகமாகக் காணப்படுவதால், மயக்க மருந்தைத் திட்டமிடும்போது நோயாளியின் குடும்பப் பின்னணி பற்றியும் மருத்துவர்கள் விசாரிப்பர். எனினும், அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இந்தக் குறைபாடு இருக்கும் என்பது தவறான புரிதல் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

By admin