பட மூலாதாரம், Photo by Cyrus Read/U.S. Geological Survey
படக்குறிப்பு, ஆகஸ்ட் 2025-இல் அலாஸ்காவில் உள்ள சவுத் சாயர் பனிப்பாறைக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சுனாமியின் வான்வழித் தோற்றம்.கட்டுரை தகவல்
அலாஸ்கா மலையின் ஒரு பகுதி சரிந்து கடலில் விழுந்ததால் உருவான பிரமாண்டமான ‘மெகாசுனாமி’ அலை, இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் இரண்டாவது மிக உயரமான அலையாகக் கருதப்படுகின்றது. இது உருகி வரும் பனிப்பாறைகளால் ஏற்படும் அபாயங்களை நினைவூட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த கோடையில், அலாஸ்காவின் தென்கிழக்கில் உள்ள ஒரு தொலைதூரக் கடற்கரை இடுக்கில் ஏற்பட்ட ராட்சத அலை, பெரும் அழிவை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு அப்போது பெரிய அளவில் செய்திகளில் வரவில்லை, ஆனால் புதிய அறிவியல் பகுப்பாய்வு சிறிய நிலநடுக்கங்கள் ஒரு பெரிய நிலச்சரிவைத் தூண்டியதைக் காட்டுகிறது.
சுமார் 64 மில்லியன் கன மீட்டர் பாறைகள், அதாவது 24 எகிப்து பிரமிடுகளுக்கு இணையான அளவுள்ள பாறைகள் கீழே உள்ள நீரில் விழுந்தன. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இவ்வளவு பெரிய பாறைகள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட அபரிமிதமான ஆற்றல், கிட்டத்தட்ட 500 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட அலையை உருவாக்கியது.
அதிகாலை நேரத்தில் இது நிகழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் கப்பல்கள் இந்த பேரழிவில் சிக்காமல் தப்பின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அலாஸ்கா புவியியலாளர் முனைவர் பிரெட்வுட் ஹிக்மேன், ட்ரேசி ஆர்ம் ஜோர்டில் ஏற்பட்ட சேதத்தை நேரில் கண்டு, இது “நூலிழையில் தப்பிய ஒரு சம்பவம்” என்று கூறினார்.
“தவறான நேரத்தில் சிலர் தவறான இடத்துக்கு அருகில் இருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று கூறிய அவர், “எதிர்காலத்தில் நமக்கு இதே போன்ற அதிர்ஷ்டம் இருக்காது என நான் பயப்படுகிறேன்” என்றார்.
நிலநடுக்கம் அல்லது தளர்வான பாறைகளால் ஏற்படும் நிலச்சரிவு நீரில் விழும்போது இத்தகைய மெகாசுனாமி அலைகள் உருவாகின்றன. இவை பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தோன்றி விரைவாக மறைந்துவிடும்.
மற்றொரு வகை சுனாமி திறந்த கடலில் உருவாகிறது. இவை நிலநடுக்கங்களால் அல்லது சில நேரங்களில் நீருக்கடியில் ஏற்படும் எரிமலை வெடிப்பு போன்ற சக்திவாய்ந்த நிகழ்வுகளால் நேரடியாகத் தூண்டப்படுகின்றன.
இவை 2011 ஜப்பான் சுனாமி போல ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கி பெரும் அழிவையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தக்கூடியவை.
மிகப்பெரிய மெகாசுனாமி 1950களில் ஏற்பட்டது, அது 500 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டது.
தற்போது நிகழ்ந்த இந்த மெகாசுனாமி இரண்டாவது பெரிய அலையாகக் கருதப்படுகின்றது.
பட மூலாதாரம், Photo by Cyrus Read/U.S. Geological Survey.
படக்குறிப்பு, கடற்கரை இடுக்கின் நுழைவாயில் அருகே சுனாமியால் ஏற்பட்ட சேதத்தின் தரைமட்டத் தோற்றம்.
கண்டது என்ன?
முனைவர் ஹிக்மன், சுனாமி தாக்கிய சில வாரங்களுக்குப் பிறகு ட்ரேசி ஆர்ம் ஃப்யோர்டு பகுதிக்கு சென்றார். அலாஸ்காவின் இயற்கை அதிசயங்களை காணும் சுற்றுலா கப்பல்களிடையே பிரபலமான இடமாக அது விளங்குகிறது.
மலைச்சரிவுகளில் மரங்கள் முறிந்து கிடப்பதையும், அவை தண்ணீருக்குள் தூக்கி எறியப்பட்டிருப்பதையும் அவர் கண்டார். மேலும், மண் மற்றும் தாவரங்கள் இல்லாமல் பாறைகளாக மாறியிருந்த பரந்த பகுதிகளையும் அவர் கவனித்தார்.
செங்குத்தான மலைகள், குறுகிய கடற்கரை இடுக்குகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் காரணமாக அலாஸ்கா இத்தகைய மெகாசுனாமிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.
இப்போது ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு, காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் பனிப்பாறை உருகுதல் மற்றும் பனி உறைந்த நிலம் சிதைவடைதல் ஆகியவை இத்தகைய சரிவுகளை மோசமாக்குகின்றன என்று தெரிவிக்கிறது.
அந்த ஆராய்ச்சிக் குழுவினர் களப்பணி, நில அதிர்வு மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை ஒருங்கிணைத்து, அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளின் சங்கிலித் தொடரை மீண்டும் உருவாக்கி, அலையின் உயரத்தைக் கண்டறிந்தனர்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் ஸ்டீபன் ஹிக்ஸ், முன்னதாக இந்தப் பனிப்பாறை “பாறையின் ஒரு பகுதியைத் தாங்கிப் பிடிக்க உதவியது” என்றும், பனி பின்வாங்கியபோது அது செங்குத்துப் பாறையின் அடிப்பகுதியைத் திறந்துவிட்டதால் “பாறைப் பகுதி திடீரென நீருக்குள் சரிந்து விழுந்தது” என்றும் கூறினார்.
அவரும் அவருடைய சக ஆய்வாளர்களும் பல ஆண்டு காலங்களாக சுனாமிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் அவர்கள் இது குறித்து கவலை கொண்டுள்ளனர்.
“இப்போது அதிகமான மக்கள் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்கிறார்கள். பெரும்பாலும் இந்த சுற்றுலா கப்பல்கள் காலநிலை மாற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ளவே இத்தகைய இயற்கை அழகு நிறைந்த இடங்களுக்குச் செல்கின்றன. ஆனால் அவை அபாயகரமான இடங்களாகும்” என்று முனைவர் ஸ்டீபன் ஹிக்ஸ் குறிப்பிட்டார்.
மெகாசுனாமிகளின் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிய முனைவர் ஹிக்மேன்,
“இந்த நேரத்தில், இவை ஒரு சிறிய அளவு மட்டுமல்ல, மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றன என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “சில ஆண்டு காலங்களுக்கு முன்பு இருந்ததை விட, இவை சுமார் 10 மடங்கு அடிக்கடி நிகழக்கூடும்” என்று அவர் குறிப்பிட்டார்.
மெகாசுனாமிகளால் பாதிக்கப்படக்கூடிய அலாஸ்காவின் பகுதிகளில் உள்ள அபாயங்களை விரிவாகக் கண்காணிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தொடர்பான அச்சத்தின் காரணமாக சில கப்பல் நிறுவனங்கள் ட்ரேசி ஆர்ம் பகுதிக்கு கப்பல்களை அனுப்புவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.