மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ தற்போது செய்திகளில் இடம் பிடித்துள்ளார். சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், அவர் “அஸ்ஸலாமு அலைக்கும்”, “இன்ஷா அல்லாஹ்”, “ஜஸாக்கல்லாஹ்” போன்ற இஸ்லாமிய வாழ்த்துகள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 14 தேதியிட்ட அரசாணையின்படி, 2021 பேட்ச் ஐபிஎஸ் (இந்திய காவல் பணி) அதிகாரியான புஷ்ரா பானோ, மேற்கு மிட்னாபூரில் உள்ள கரக்பூரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மாநில ஆயுதப் படையின் 4வது பட்டாலியனின் துணை கமாண்டன்ட் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே உத்தரவில் மேலும் இரண்டு காவல் துறை அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணியிடமாற்றங்கள் ‘பொது நலன் கருதி’ எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு என அந்த அரசாணை விவரிக்கிறது.
அரசு அதிகாரிகள் இதை ‘வழக்கமான பணியிட மாற்றம்’ என்று விவரித்துள்ளனர். இருப்பினும், “புஷ்ரா பானோவுக்கு அநியாயமாக ‘கேரேஜ் போஸ்டிங்’ வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவரது முந்தைய பதவியைவிடக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ நௌஷாத் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, புஷ்ரா பானோவின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) போட்டித் தேர்வுக்குத் தயாராவது குறித்து அவர் பேசுவதைக் கேட்க முடிகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் உறைவிடப் பயிற்சி அகாடமி, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெண்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு உதவுவதாக அவர் கூறினார்.
முன்னாள் மாணவி என்ற முறையில், இந்தப் பயிற்சி அகாடமி தனது படிப்பு மற்றும் தேர்வுத் தயாரிப்புக்கு மிகவும் உதவியதாகவும் அவர் கூறினார்.
அந்தக் காணொளியில் அவர் கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின. சீருடையில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் பொது வெளியில் “அஸ்ஸலாமு அலைக்கும்”, “இன்ஷா அல்லாஹ்”, “ஜஸாக்கல்லாஹ்” போன்ற மத ரீதியான சொற்றொடர்களைப் பயன்படுத்தலாமா என சிலர் கேள்வி எழுப்பினர். ‘ஜெய் ஹிந்த்’ அல்லது ‘வந்தே மாதரம்’ போன்ற சொற்றொடர்களை அவர் ஏன் பயன்படுத்தவில்லை என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.
‘ஜெய் ஹிந்த் அல்லது வந்தே மாதரம் ஏன் பயன்படுத்தவில்லை?’
அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை. இருப்பினும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று, அந்தக் காணொளியை புஷ்ரா பானோவின் சமூக ஊடக பதிவுடன் தொடர்புபடுத்தியது. தற்போது புஷ்ரா பானோவின் சமூக ஊடகக் கணக்குகளில் அந்தக் காணொளி இல்லை.
சுதர்சன் நியூஸ், ஜெய்ப்பூர் டயலாக்ஸ் உள்ளிட்ட சில இந்துத்துவா தளங்களிலும் இந்தக் காணொளி விவாதிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Bushara Bano’s Facebook page
படக்குறிப்பு, ‘இந்து லீகல் ஃபண்ட்’ என்ற அமைப்பு, புஷ்ரா பானுவுக்கு எதிராக மேற்கு வங்க உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளது
‘இந்து லீகல் ஃபண்ட்’ என்ற அமைப்பு செப்டம்பர் 13 அன்று தனது எக்ஸ் பக்கத்தில், புஷ்ரா பானோவுக்கு எதிராக மேற்கு வங்க உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 13 அன்று, இந்து லீகல் ஃபண்டின் எக்ஸ் பக்கத்தில், “அவர் தனது உரையை ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று தொடங்கினார். ‘இன்ஷா அல்லாஹ்’ என்பதைப் பயன்படுத்தினார் மற்றும் ‘ஜஸாக்கல்லாஹ்’ என்று கூறி முடித்தார். ஆனால் ‘வந்தே மாதரம்’ அல்லது ‘ஜெய் ஹிந்த்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை,” என்று பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் அந்தப் பதிவில், “இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு அதிகாரி ஒருவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும், பொது உரையாடல்களில் தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய ஆய்வும், நடவடிக்கையும் கோரப்படுகிறது,” என்று சொல்லப்பட்டது.
அதற்கு மறுநாளான செப்டம்பர் 14 அன்று, மேற்கு வங்க அரசின் உள்துறை அமைச்சகம் புஷ்ரா பானோவை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே ஒரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளதால், புஷ்ரா பானோவின் பணியிட மாற்றத்திற்கும் இந்துத்துவா அமைப்பின் புகாருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்தப் பணியிட மாற்றம் குறித்துக் கேட்டபோது, “இத்தகைய பணியிட மாற்றங்கள் ஒரு சாதாரண செயல்முறை. எப்போது வேண்டுமானாலும் செய்யப்படலாம். இந்தப் பணியிட மாற்ற உத்தரவுக்கும் சமீபத்திய எந்தவொரு சர்ச்சைக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Asian News International
படக்குறிப்பு, இந்திய மதச் சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ நௌஷாத் சித்திக் (கோப்புப் படம்)
‘இஸ்லாமிய பெண் என்பதாலேயே பணியிட மாற்றம்’
சமூக ஊடகங்களில் புஷ்ரா பானோவின் பேச்சுக்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல இஸ்லாமிய அமைப்புகள் ஆன்லைனில் அவரது இடமாற்றம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளன.
புஷ்ரா பானோவின் வைரல் காணொளி தவிர, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பல காவல் துறை அதிகாரிகளின் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவற்றில், அவர்கள் சீருடையுடன் பூஜை விழாக்களில் கலந்து கொள்வதைக் காண முடிகிறது. இந்தக் காணொளிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்தக் காணொளிகளின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
“ஒருபுறம் பாஜக அரசு மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் குறித்துப் பேசி வருகின்ற அதேவேளையில், மறுபுறம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முன்மொழிவதாக” மேற்கு வங்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏ நௌஷாத் சித்திக் கேள்வி எழுப்புகிறார்.
“அதே நேரத்தில், ‘படித்த, மதிப்புமிக்க பதவியில் மரியாதையுடன் பணிபுரியும்’ இஸ்லாமிய பெண் அதிகாரி ஒருவர், ‘தவறாக’ பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். அவர் மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். இந்த வார்த்தைகள் வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரையும் புண்படுத்தக் கூடியவையல்ல. இந்த வார்த்தைகள் தேச விரோதமானவையும் அல்ல” என்று அவர் வாதிடுகிறார்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வாரிஸ் பதான் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், “அவர் இஸ்லாமிய ஐபிஎஸ் அதிகாரி, ஒரு பெண் என்பதால் அவரைப் பணியிட மாற்றம் செய்தீர்களா?” என்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எத்தனையோ பேர் சீருடை அணிந்து கொண்டு பூஜை மற்றும் ஆரத்தி செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எத்தனையோ பேர் சீருடையில் கன்வாரியாக்கள் மீது பூக்கள் தூவுவதைக் கண்டுள்ளோம். அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?” என்றும் அவர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Bushara Bano’s Facebook page
படக்குறிப்பு, புஷ்ரா பானோ அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு மக்களுக்கு ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்ல எப்படி உரிமை அளிக்கிறதோ, அதே அளவு உரிமையை ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ சொல்லவும் அளிப்பதாகக் கூறுகிறார் அவர்.
புஷ்ரா பானோவின் பணியிட மாற்றம் குறித்து மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒருபுறம், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ‘தொழுகை அறை’ ஒன்றை அமைப்பதன் மூலம் பாஜக அரசு மதச்சார்பற்ற பிம்பத்தை வெளிப்படுத்துகிறது. மறுபுறம், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’, ‘ஜஸாக்கல்லாஹ்’ கூறியதற்காகவே இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ ஓரம் கட்டப்படுகிறார். இது ‘கோடி மீடியா’ பரப்பி வரும் வெறுப்பு சூழ்நிலையை மேலும் தூண்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சீருடையில் இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மேற்கு வங்க காவல்துறையின் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜெக்மோகன் பட் பிபிசியிடம் கூறுகையில், “தனது நீண்ட பணிக் காலத்தில் அதிகாரிகள் மற்றவர்களை ‘ஜெய் ஹிந்த்’ என்பதைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் பயன்படுத்தி வாழ்த்தியதைத் தான் கேட்டதில்லை” என்றார்.
“மாநில காவல் துறையாக இருந்தாலும் சரி, ராணுவமாக இருந்தாலும் சரி அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, எந்தவொரு அரசு நிறுவனம் அல்லது படையில் சீருடையில் இருக்கும் அதிகாரிகள் பொதுவாக ‘ஜெய் ஹிந்த்’ என்றுதான் சொல்வார்கள். சீருடையில் இருக்கும்போது இதுதான் மிகவும் பொதுவான வாழ்த்து முறை. எங்கள் பணியின்போது, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ அல்லது ‘ராதே ராதே’ போன்ற எந்தவொரு மத ரீதியான வார்த்தைகளையோ, மதக் கொடிகளையோ, சின்னங்களையோ பயன்படுத்தாமல் இருப்பதில் நாங்கள் எப்போதும் கவனமாக இருந்தோம்,” என்றும் அவர் கூறினார்.
யார் இந்த புஷ்ரா பானோ?
புஷ்ரா பானோவின் லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மனிதவள மேம்பாட்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். காவல்துறை நிர்வாகத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் உத்தர பிரதேச அரசில் துணை ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.
அவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் இரண்டு முறை தேர்ச்சி பெற்றுள்ளார். முதல் முறை தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணியில் பணியாற்றினார். இரண்டாவது முறை தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் மேற்கு வங்க காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.