பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி நரேந்திர மோதி முதன்முதலில் இந்தியாவின் பிரதமரான போது, ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பு 58.94 இந்திய ரூபாயாக இருந்தது.
மோதி தனது இரண்டாவது பதவிக்காலத்தை வென்றபோது, ரூபாயின் மதிப்பு 17 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து, 2019-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி டாலருக்கு எதிராக 69.37 என்ற நிலையை எட்டியது.
2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நரேந்திர மோதி தனது மூன்றாவது பதவிக்காலத்தை ஏற்றபோது, ரூபாயின் மதிப்பு 83.38 என்ற நிலையை எட்டியிருந்தது. இதன் பொருள், 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூபாயின் மதிப்பு 20 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்துள்ளது.
தற்போது, அவரது மூன்றாவது பதவிக்காலம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக சுமார் 96 என்ற அளவில் உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் இது 14.75 சதவீதம் சரிவாகும். ஒட்டுமொத்தமாக, பிரதமர் நரேந்திர மோதியின் 12 ஆண்டு காலப் பதவிக்காலத்தில் ரூபாயின் மதிப்பு 62.33 சதவீதம் சரிந்துள்ளது.
ஆனால், முந்தைய அரசாங்கங்களின்போது ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் (2004-2014), ரூபாய் 31.65 சதவீதம் சரிந்தது.
மே 2014-ல் மன்மோகன் சிங் பிரதமரானபோது, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45.31 ரூபாயாக இருந்தது, அவர் பதவி விலகியபோது, ரூபாயின் மதிப்பு சுமார் 60 ஆகக் குறைந்திருந்தது.
இந்திய ரூபாயின் பலவீனம் குறித்து தற்போது கடுமையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரம் அதன் போட்டியாளர்களை விட வேகமாக வளர்ந்தால், அதன் நாணயம் வலுப்பெறும்.
ஆனால் இந்தியாவின் விஷயத்தில் இது அவ்வாறு இல்லை. ஒரு காலத்தில் மோதியின் பொருளாதாரக் கொள்கைகளின் ரசிகராக இருந்த சுர்ஜித் பல்லாவும் இதே கேள்வியைக் கேட்கிறார்: பொருளாதாரம் செழிப்பாக இருக்கும்போது, ரூபாய் ஏன் வீழ்ச்சியடைகிறது?
பட மூலாதாரம், Getty Images
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சீனாவை விட அதிகமாக இருந்து வருகிறது என்று தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும், இதையும் மீறி, கடந்த சில ஆண்டுகளாக ரூபாய் ஆண்டுதோறும் பலவீனமடைந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்குக் கடுமையான இறக்குமதி வரிகளை விதித்தபோது, கடந்த ஆண்டு இந்த வீழ்ச்சி மேலும் தீவிரமடைந்தது.
அதன்பின், இரான் போரின் விளைவாக ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி, ரூபாயை புதிய சாதனை அளவிலான வீழ்ச்சிக்குத் தள்ளியது.
மார்ச் மாதத்தின் பிற்பகுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியிலும், இந்திய ரிசர்வ் வங்கி ரூபாயை வலுப்படுத்தத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் சிறிய அளவிலான நிவாரணத்தை மட்டுமே அளித்தன, மேலும் நாட்டிலிருந்து டாலர் வெளியேறுவதையும் தடுக்கவில்லை.
மோதி அரசாங்கத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியனும், ரூபாயின் பலவீனம் இரான் போரினால் மட்டுமே ஏற்படவில்லை என்று நம்புகிறார்.
மே 26 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், “போருக்கு முந்தைய இரண்டு-மூன்று ஆண்டுகளில், துருக்கியைத் தவிர வேறு எந்த நாட்டின் நாணயமும் இந்திய ரூபாயைப் போல இவ்வளவு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. அதைக் காப்பாற்றுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி அசாதாரண அளவில் தலையிட்டபோதும், அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. 2022-க்கும் பிப்ரவரி 2026-க்கும் இடையில், ரூபாய் 20 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்தது, அதே நேரத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்தது.” என அரவிந்த் சுப்ரமணியன் எழுதியிருந்தார்.
இந்திய ரூபாய் பலவீனமடைந்துள்ள நிலையில், பல ஆசிய நாடுகளின் நாணயங்கள் வலுவடைந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
மலேசியா
மலேசியாவின் நாணயமான ரிங்கிட் கடந்த ஆண்டு 9.25% வலுவடைந்தது, அதே சமயம் இந்திய ரூபாய் அதே ஆண்டில் 4.40% பலவீனமடைந்தது.
மலேசிய நாணயமான ரிங்கிட், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான நிலையை எட்டியுள்ளது.
ஜனவரி 2025-ல், அதன் மதிப்பு கிட்டத்தட்ட 4.50 ஆகக் குறைந்தது, ஆனால் அதன்பிறகு ஒரு மீட்சியைக் கண்டுள்ளது. இந்த எழுச்சி, ரிங்கிட்டை தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக வேகமாக வலுவடையும் நாணயமாக மாற்றியுள்ளது.
மலேசியாவின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவது போன்ற பல உலகளாவிய காரணிகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
மலேசிய நாணயத்தின் வலிமைக்கான காரணங்களை விளக்கி, நிக்கெய் ஆசியா தனது அறிக்கையில், “நாட்டின் நடப்புக் கணக்கு உபரி, வலுவான உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் 2025-ல் கணிக்கப்பட்ட 4.9 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆகியவையும் இந்த அடிப்படைப் பொருளாதாரக் காரணங்களுக்கு பின்னால் உள்ளன. அந்நிய நேரடி முதலீடும் அதிகரித்துள்ளது, இது உள்ளூர் நாணயத்திற்கான தேவையை வலுப்படுத்துகிறது. 2025-ஆம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிகர வெளிநாட்டு முதலீட்டு வரவு 8.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது. இது இரண்டாவது காலாண்டில் வெறும் 1.6 பில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது.” என குறிப்பிட்டுள்ளது.
நிக்கெய் ஆசியாவிடம் பேசிய தென்கிழக்கு ஆசியப் பொருளாதார நிபுணர் டோரிஸ் லியு, “மலேசியாவின் வணிகச் சூழல் குறித்த வளர்ந்து வரும் நம்பிக்கையே ரிங்கிட்டின் வலிமைக்குக் காரணமாகும். லட்சியமிக்க தொழில்துறைத் திட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் விரிவாக்கம், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், மற்றும் அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் மலேசியாவின் உத்தி நிலைப்பாடு ஆகியவற்றின் விளைவாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சீனா
சீனாவின் நாணயமான ரென்மின்பி (யுவான்), அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான நிலையை எட்டியுள்ளது.
மே 11 அன்று, சீன மக்கள் வங்கி, ஒரு டாலருக்கு 6.8467 என்ற தினசரி ரென்மின்பி மாற்று விகிதத்தை நிர்ணயித்தது. இது மார்ச் 2023-க்குப் பிறகு எட்டப்பட்ட மிக வலுவான நிலையாகும்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும், சீனாவின் அதிகரித்து வரும் வர்த்தக உபரியின் காரணமாக, அது தனது நாணயத்தை செயற்கையாக பலவீனப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
கடந்த ஆண்டு, யூரோவுக்கு எதிராக ரென்மின்பி சுமார் எட்டு சதவீதம் பலவீனமடைந்தது, இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீனாவின் ஏற்றுமதி சாதனை அளவை எட்ட உதவியது.
ரென்மின்பி இன்னும் சுமார் 20 சதவீதம் குறைவான மதிப்பில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் டாலருக்கு எதிராக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் மதிப்பிடுகிறது.
சீனாவில் பல ஆண்டுகளாக நிலவும் பணவாட்டமும், யுவான் அதன் உண்மையான மதிப்பை விட பலவீனமாகவே உள்ளது என்ற கவலைகளைத் தூண்டியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூர்
சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் டாலர் என்று அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர் டாலர், அமெரிக்க டாலருக்கு எதிராகவும் வலுப்பெற்றுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் இது சுமார் ஒரு சதவீதம் மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது, ஒரு அமெரிக்க டாலர் 1.28 சிங்கப்பூர் டாலர்களுக்குச் சமம்.
உண்மையில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த வார திங்கட்கிழமை, சிங்கப்பூர் தனது முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 4.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 6 சதவீதமாக இருந்ததாக அறிவித்தது.
கடந்த ஆண்டு, சிங்கப்பூரின் பொருளாதாரம் ஐந்து சதவீதம் வளர்ச்சி கண்டது. இது முன்னர் மதிப்பிடப்பட்ட 4.8 சதவீதத்தை விட அதிகமாகும்.
ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் மிகவும் வலுவான வர்த்தகப் புள்ளிவிவரங்களைப் பதிவு செய்தது.
நாட்டின் முக்கிய எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதிகள் ஏப்ரல் மாதத்தில் 24.5 சதவீதம் வளர்ச்சி கண்டன. இது பிப்ரவரி 2012-க்குப் பிறகு பதிவான மிக வேகமான வளர்ச்சி விகிதமாகும்.
மின்னணு ஏற்றுமதிகளும் 66.7 சதவீதம் என்ற உயர்வைப் பதிவு செய்தன. இது ஆசியா முழுவதும் காணப்படும் பரந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான்
பாகிஸ்தானிய ரூபாயும் கூட நிலையாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில், பாகிஸ்தானிய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 1.31 சதவீதம் வலுப்பெற்றுள்ளது, அதே நேரத்தில் இந்திய ரூபாய் இந்த ஆண்டு ஆறு சதவீதத்திற்கும் மேலாக மதிப்பிழந்துள்ளது. தற்போது, ஒரு டாலரின் மதிப்பு 278 பாகிஸ்தானிய ரூபாய் ஆகும்.
கலீஜ் டைம்ஸ் செய்தியிடம் பேசிய செஞ்சுரி ஃபைனான்சியல் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி விஜய் வலேச்சாவின் கூற்றுப்படி, பிராந்திய பதற்றங்கள் இருந்தபோதிலும், பாகிஸ்தானிய ரூபாய் சமீபத்திய மாதங்களில் நிலையாக இருந்து வருகிறது.
இதற்கு ஒரு முக்கிய காரணம், மார்ச் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட நடப்புக் கணக்கு உபரியாகும். இது, அதிக எண்ணெய் விலைகள் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு மத்தியில் அந்நிய செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைத்தது.
கூடுதலாக, செளதி அரேபியாவின் ஆதரவும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக யூரோபாண்ட் சந்தைக்கு பாகிஸ்தான் மீண்டும் திரும்பியதும் முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்தி, குறுகிய கால நிதி திரட்டல் குறித்த கவலைகளைத் தணித்துள்ளன.
“வலுவான உள்நாட்டுப் பொருளாதார மீட்சியை விட, மேம்பட்ட வெளிப்புறச் சூழல்களின் விளைவாகவே பாகிஸ்தானிய ரூபாயின் நிலைத்தன்மை அமைந்துள்ளது. இந்த நாணய மதிப்பு உயர்வு மேலும் தொடரலாம், ஆனால் பெரும்பாலான நல்ல செய்திகள் ஏற்கனவே சந்தை விலைகளில் பிரதிபலித்துவிட்டன. எண்ணெய் விலைகள் மென்மையாக நீடித்தால், அந்நியச் செலாவணிக் கையிருப்பு மேம்பட்டால், வெளிநாட்டிலிருந்து வரும் பணம் வலுவாக இருந்தால், மற்றும் வெளிநாட்டு நிதியுதவி தொடர்ந்தால், பாகிஸ்தானிய ரூபாய் மேலும் வலுப்பெறக்கூடும்,” என்றார் விஜய் வலேச்சா.
பட மூலாதாரம், Getty Images
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் விளைவு என்ன?
நாணய மதிப்பின் சரிவு, இறக்குமதிகளில் மிகவும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரூபாயின் மதிப்பு குறையும்போது, எண்ணெய், சமையல் எரிவாயு, உரங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி விலை அதிகரிக்கிறது. இந்தியா இந்தப் பொருட்களில் பெரும்பாலானவற்றை வெளிநாடுகளிலிருந்து வாங்குகிறது.
பலவீனமான ரூபாய், உலகளாவிய முதலீட்டாளர்களைப் புதிய சந்தைகளைத் தேடத் தூண்டுகிறது, இது அவர்களின் வருமானத்தைப் பாதிக்கிறது.
மே மாத இறுதிக்குள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் சாதனை அளவாக 23 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.
உள்ளூர் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு மூலதனம் வெளியேறியது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமநிலைப்படுத்துவதை இந்தியாவிற்குச் சவாலானதாக ஆக்கியுள்ளது.
இருப்பினும், இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. இந்தியப் பொருட்களும் சேவைகளும் வெளிநாடுகளில் மலிவாகக் கிடைப்பதால், பலவீனமான ரூபாய் இந்திய ஏற்றுமதிகளை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்குகிறது.
பலவீனமான ரூபாய், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தைச் சார்ந்துள்ள குடும்பங்களுக்கும் நன்மை அளிக்கிறது, ஏனெனில் ஒவ்வொரு டாலருக்கும் அதிக ரூபாய் கிடைக்கிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு