8
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய வலய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இருபாலாரிலும் சம்பியனான இந்திய அணிகளும் ஆண்களின் உப சம்பியனான இலங்கையும் ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற தகுதிபெற்றன.

தெற்காசிய வலயத்திற்கான ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்ட தகுதிகாண் சுற்றில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கையை 78 – 56 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிகொண்டு சம்பியனானது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கையை 83 – 57 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சம்பியன் பட்டத்தை சூடியது.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் இந்திய வீரர்களின் வேகத்திற்கும் எதிர்த்தாடும் உத்திக்கும் ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறிப்போயினர். அப் பகுதியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இந்தியா 20 – 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் திறமையாக விளையாடி இலங்கை சவால் விடுத்த போதிலும் அந்தப் பகுதியிலும் இந்தியா 4 புள்ளிகள் (22 – 18) வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இதற்கு அமைய இடைவேளையின் போது 42 – 22 என 20 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை முழுத்திறமையையும் வெளிப்படுத்தி அப்பகுதியில் புள்ளிகள் நிலையை 16 – 15 என இலங்கை தனக்கு சாதகமாக்கியது. ஆனால், இந்தியா தொடர்ந்தும் 57 – 38 என முன்னிலையில் இருந்தது.
கடைசி ஆட்டநேர பகுதியில் மீண்டும் திறமையை வெளிப்படுத்திய இந்தியா அப் பகுதியை 21 – 18 என தனக்கு சாதகமாக்கி 78 – 56 என வெற்றிபெற்று சம்பியனானது.
பெண்கள் பிரிவில் இந்தியா அசத்தல்
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்தாடிய இந்தியா – 83 – 57 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்று சம்பியனானது.
இந்தப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் 20 – 16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்த இலங்கை எதிரணிக்கு பலத்த சவாலாக இருந்தது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியின் ஒரு கட்டத்தில் 26 – 27 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியை தளரவிட்ட இலங்கை அப் பகுதியில் பெரும் பின்னடைவு கண்டது.
இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 30 – 12 என 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தனதாக்கிக் கொண்ட இந்தியா இடைவேளையின் 46 – 32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து 3ஆவது ஆட்ட நேர பகுதியை 17 – 10 எனவும் கடைசி ஆட்ட நேர பகுதியை 20 – 15 எனவும் தனக்கு சாதமாக்கிக் கொண்ட இந்தியா, இறுதியில் 83 – 57 என அமோக வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

பெண்கள் பிரிவில் இலங்கை அணியினர் மோசமாக விளையாடிய போதிலும் தலைமைப் பயிற்றுநர் குறிப்பிட்ட சில வீராங்கனைகளை மாத்திரம் பயன்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஏனைய ஐந்து வீராங்கனைகளும் வெறுமனே வீராங்கனைகள் ஆசனத்தில் அமர்ந்துவாறு தமது அணி படு தோல்வி அடைவதை ஏக்கத்துடன் பார்க்க நேரிட்டது.
இடைவேளையின் போது ஆட்டம் இலங்கையை விட்டு கைநழுவிப்போன போதிலும் மாற்று வீராங்கனைகளுக்கு பயிற்றுநர் வாய்ப்பு கொடுத்து அவர்களைப் பரீட்சித்திருக்கலாம் என சில பெற்றோர்களும் கூடைப்பந்தாட்ட விமர்சகர்களும் அரங்கில் முணுமுணுத்ததை கேட்கக்கூடியதாக இருந்தது.
ஆனால், படுதோல்வியைத் தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட சில வீராங்கனைகளை மாத்திரம் பயன்படுத்த திர்மானித்ததாக பயிற்றுநர் தரப்பில் நியாயம் கூறப்பட்டது.
இது குறித்து கூடைப்பந்தாட்டத் தேர்வாளர்களும் நிர்வாகத்தினரும் கவனம் செலுத்தி இத்தகைய குறைகள் நிகழ்வதை தவிர்ப்பது வரவேற்கத்தக்கதாகும்.


![]()