• Mon. Sep 21st, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை

Byadmin

Sep 21, 2026


ஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி – நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி20 கிரிக்கெட்  இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதி பெற்றுள்ளது.

இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது பதக்கம் கிடைக்கவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக நிஷின் கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது.

அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

ஷஃபால் ஸுல்ஃபிகார் (54), அயேஷா ஸஃபார் (71) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானைப் பலப்படுத்தினர்.

அணித் தலைவி பாத்திமா சானா 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 83 ஓட்டங்களைக் குவித்தார்.

42 ஓட்டங்களைப் பெற்ற ஹசினி பெரேராவுடன் சமரி அத்தபத்து 2ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இமேஷா துலானி 27 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தியா வெற்றி

பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா 114 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.

ஷபாலி வர்மா ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைக் தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் குவித்த முதல் விராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 15.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 81 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

By admin