• Mon. Sep 21st, 2026

24×7 Live News

Apdin News

ஆள் சேர்ப்பில் ஏஐ தாக்கம்: வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் எவை?

Byadmin

Sep 21, 2026


செயற்கை நுண்ணறிவு, நேர்காணல், விண்ணப்பம், வேலைவாய்ப்பு, ஆட்சேர்ப்பு நிபுணர், கூகுள், லிங்க்ட்இன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில நிறுவனங்கள் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்களைப் பயன்படுத்தி நேர்காணல்களை நடத்தி வருகின்றன

நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், செயற்கை நுண்ணறிவு ஒரு வகையில் உங்களுக்கு நண்பனாகவும், மற்றொரு வகையில் எதிரியாகவும் மாறியுள்ளது. நேர்காணலுக்குத் தயாராகவும், குறிப்பிட்ட வேலைகளுக்கு ஏற்ப சுயவிவரக் குறிப்பைத் தயாரிக்கவும் ஏஐ உதவுகிறது. அதேவேளையில், மனிதவள அதிகாரிகள் உங்கள் திறன்களையும் சிறப்புத் தகுதிகளையும் மதிப்பிடுவதற்கு முன்பே, உங்கள் விண்ணப்பத்தை ஏஐ நிராகரிக்கவும் கூடும்.

செயற்கை நுண்ணறிவின் வருகை, வேலை தேடும் முறையையும் வேலைவாய்ப்பைப் பெறும் முறையையும் கணிசமாக மாற்றியுள்ளது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஏஐ மாதிரிகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில், “அல்காரிதம் நமது விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமா?” என்பது கேள்வியல்ல. மாறாக, “அந்த அல்காரிதம் நமக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில் நம்மை எப்படித் தயார்படுத்திக் கொள்வது?” என்பதே முக்கியக் கேள்வியாக மாறியுள்ளது.

கூகுள் மற்றும் லிங்க்ட்இன் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு நிபுணராகப் பணியாற்றியவரும், தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்கி வருபவருமான அட்ரியானா கார்வஜால் பிபிசியிடம் பேசுகையில், “வேலைவாய்ப்புச் சந்தை இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான போட்டியாக மாறியுள்ளது” என்றார்.

“ஒரு வேலைக்கு சராசரியாக 250 பேர் விண்ணப்பிக்கின்றனர். அதுவே அந்த அறிவிப்பு லிங்க்ட்இனின் ‘ஈஸி அப்ளை’ (Easy Apply) வசதியுடன் வெளியிடப்பட்டால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சராசரியாக 800-க்கும் அதிகமாகிறது” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இதனால் நிறுவனங்கள் ஒவ்வொரு சுயவிவரத்தையும் தனித்தனியாகப் பரிசீலிப்பது சாத்தியமற்றதாகிறது. ‘ஈஸி அப்ளை’ வசதி இருப்பதால், அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தூண்டப்படுகின்றனர். உண்மையில், லிங்க்ட்இன் நிமிடத்துக்கு சுமார் 11,000 விண்ணப்பங்களைச் செயல்முறைப்படுத்துகிறது. இது கடந்த ஆண்டைவிட 45% அதிகமாகும்.”

By admin