• Tue. Sep 29th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தின் 11 வயது சதுரங்க மேதை! உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் போதனா சிவானந்தன்

Byadmin

Sep 29, 2026


சர்வதேச சதுரங்க வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் ‘பெண் கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற உலக சாதனையை இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயதான போதனா சிவானந்தன் நிலைநாட்டியுள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய அவர், தனது மூன்றாவது மற்றும் இறுதி பெண் கிராண்ட்மாஸ்டர் தகுதி நிலையை உறுதி செய்ததாக சர்வதேச சதுரங்க சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வடமேற்கு இலண்டனின் ஹரோ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியான இவர், இங்கிலாந்து அணியின் முதன்மை ஆடுகளத்தில் களமிறங்கி அனைத்து 11 சுற்றுகளிலும் போட்டியிட்டு மொத்தம் எட்டு புள்ளிகளைப் பெற்றார். பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்கு அவசியமான 2,300 சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை ஏற்கெனவே கடந்திருந்த நிலையில், இந்த போட்டித் தொடரின் மூலம் இறுதித் தகுதியையும் எட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய கத்ரீனா லக்னோ மற்றும் சீனாவின் ஹூ யிபான் ஆகியோர் தமது 12ஆவது வயதில் இப்பட்டத்தைப் பெற்று இளம் சாதனையாளர்களாகத் திகழ்ந்த நிலையில், அந்த வரலாற்று சாதனையை போதனா சிவானந்தன் முறியடித்துள்ளார். அத்துடன், பொதுப் பிரிவில் வழங்கப்படும் உயரிய சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான தனது இரண்டாவது தகுதி நிலையையும் இந்தத் தொடரின் ஊடாக அவர் தனதாக்கியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று முடக்கக் காலப்பகுதியில் சுயமாக சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்ட போதனா, மிகக் குறுகிய காலத்திலேயே சர்வதேச ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்தார். ஐரோப்பிய பாடசாலைகள் சாம்பியன்ஷிப் தொடரில் 24 ஆட்டங்களிலும் வெற்றி, 09ஆவது வயதில் ஒலிம்பியாட் தொடரில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளம் வீராங்கனை, கிராண்ட்மாஸ்டர் ஒருவரை வீழ்த்திய இளம் பெண் என பல்வேறு மைல்கற்களை இவர் தொடர்ச்சியாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த வரலாற்று சாதனை குறித்து கருத்து வெளியிட்ட போதனா சிவானந்தன், இந்த மைல்கல் தமக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்து பல வரலாற்று வெற்றிகளை ஈட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், 2007ஆம் ஆண்டில் இவரது பெற்றோர் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்ததன் பின்னர் இலண்டனில் பிறந்து வளர்ந்த இங்கிலாந்து பிரஜையாவார்.

இங்கிலாந்தின் 11 வயது சதுரங்க மேதை! உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் போதனா சிவானந்தன்

By admin