11
இங்கிலாந்து நிதியமைச்சர் ஜோன் ஹீலியின் கன்னி வரவு- செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாட்டின் கடன் செலவீனங்கள் தீவிரமாக அதிகரித்து வருவதுடன், பொருளாதார வளர்ச்சி வேகமும் குறைவடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகள் குறைக்கப்பட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடன் வாங்குவதற்கான வட்டிச் செலவுகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதனால், இங்கிலாந்தும் அமெரிக்காவும் தமது கடன் அளவை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் கடன்களை ஆபத்தான அளவுக்கு உயர்த்தி வருவதாகவும், அரசாங்கங்கள் கடன் மீதான வட்டிச் சுமையைக் குறைக்க காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான துணிச்சலான நடவடிக்கைகளை அரசியல் தலைவர்கள் எடுக்க வேண்டிய நேரம் இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் மோதல்கள் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் விளைவாக எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்து, உலகளாவிய ரீதியில் பணவீக்கம் தீவிரமடைந்துள்ளது.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில், இங்கிலாந்தின் அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி முன்னர் கணிக்கப்பட்ட 1.1 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறையும் என OECD தெரிவித்துள்ளது.
எனினும், நடப்பு ஆண்டில் இங்கிலாந்து பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறந்த மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவ்வமைப்பு, இவ்வருட வளர்ச்சி கணிப்பை 0.9 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது.