6
இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகளில் எண்ணெயில் ஆழமாக பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், புதிய பழங்கள் மற்றும் மரக்கறிகளை அதிகரிப்பதற்கான புதிய விதிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடசாலை உணவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மறுசீரமைப்பு இதுவென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய உணவுத் தரக்கட்டுப்பாடுகளின் கீழ், நார்சத்து மற்றும் முழு தானியங்களின் பயன்பாடு அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், காலை உணவு வழங்கும் கழகங்களும் முதல் முறையாக இவ்வாறான போஷாக்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதுடன், பாடசாலைகளின் உணவு முறைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படவுள்ளன.
2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த மாற்றங்களுக்கான நிதியுதவிகள், பாடசாலைகளுக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் மூலமே ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், கேக் போன்ற இனிப்பு வகைகள் இடைநிலைப் பாடசாலைகளில் வாரத்துக்கு இரு முறையும், ஆரம்பப் பாடசாலைகளில் வாரத்துக்கு ஒரு முறையும் மாத்திரமே வழங்க அனுமதிக்கப்படும். அத்துடன், அவை பழங்களுடன் சேர்த்தே வழங்கப்பட வேண்டும்.
சொசேஜஸ் மற்றும் சிக்கன் நகட்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் வாரத்துக்கு ஒரு முறை மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவற்றுடன் மரக்கறி அல்லது பழங்கள் பக்க உணவாக கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கல்விச் செயலாளர் லூசி பவல், இந்த மாற்றங்கள் நாடு முழுவதும் உள்ள பாடசாலை உணவை முழுமையாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் உடற்பருமன் பிரச்சினையை கட்டுப்படுத்தவும், போஷாக்கை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வி கற்கும் திறன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் இந்த மறுசீரமைப்பு உதவும் என அந்நாட்டு கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் தங்களின் உணவு கொள்கைகள் மற்றும் உணவுப் பட்டியல்களை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்பதுடன், உணவுத் தர நிர்ணய நிறுவனத்துடன் இணைந்து இந்த நடைமுறைகள் கண்காணிக்கப்படவுள்ளன. இதற்கு பாடசாலை மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகையில் அதிபர்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடாது எனவும், சமையல் வசதிகள் மற்றும் சமையல் நிபுணர்களின் பயிற்சிகளுக்கு கூடுதல் முதலீடுகள் தேவை எனவும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.