• Sat. May 23rd, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தை ஆட்கொள்ளும் வெப்பம்: Heathrow பகுதியில் 26.9°C வெப்பநிலை பதிவாகியது!

Byadmin

May 23, 2026


இங்கிலாந்தின் ஹீத்ரோ (Heathrow) பகுதியில் 26.9°C வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் இந்த ஆண்டின் மிக வெப்பம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இலண்டனின் கியூ கார்டன்ஸில் (Kew Gardens) பதிவான 26.6°C வெப்பநிலையே இந்த ஆண்டின் அதிகபட்சமாக இருந்தது. எதிர்வரும் வார இறுதியில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சில பகுதிகளில் வெப்பநிலை 30°C வரை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மிட்லாண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, இலண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளுக்கு “ஆம்பர்” (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் போக்குவரத்து சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

வட இங்கிலாந்து மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து பகுதிகளுக்கு மஞ்சள் (Yellow) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் தகிதி, புதன்கிழமை மாலை 05 மணி வரை அமலில் இருக்கும்.

இலண்டனில் புல்வெளித் தீ (wildfire) ஏற்படும் அபாயம் “மிகவும் உண்மையானது” என்று இலண்டன் தீயணைப்புப் படை எச்சரித்துள்ளது. எனவே, மக்கள் ‘டிஸ்போசபிள் பார்பிக்யூ’ (disposable barbecues) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புற ஊதாக்கதிர் (UV) தாக்கம்: வரும் நாட்களில் UV கதிர்களின் அளவு “அதிகமாக” (High) இருக்கும் என்பதால், சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரயில் பயணிகள் போதுமான அளவு குடிநீரை எடுத்துச் செல்லுமாறும், பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும் நெட்வொர்க் ரயில் (Network Rail) கேட்டுக்கொண்டுள்ளது.

வெம்பிளி (Wembley) மைதானத்தில் நடைபெறும் போட்டிகளைக் காண வரும் சுமார் 1.7 இலட்சம் ரசிகர்கள், தகுந்த ஆடைகளை அணியவும், உடலை நீரேற்றத்துடன் (hydration) வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்க டிப்ஸ் வெப்பத்திலிருந்து தப்பிக்க நிபுணர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

பகல் நேரத்தில் சூரிய ஒளி நேரடியாக விழும் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும்.

வெப்பநிலை குறைவாக இருக்கும் இரவு நேரங்களில் அல்லது அதிகாலையில் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

By admin