இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய ‘பாலிமர்’ எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அச்சடித்து வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடிக்கு பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிப்பு:
சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ‘100 கோடி’ வரை அச்சடிக்கப்பட உள்ளன. இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், பாலிமர் நோட்டுகள் வழக்கமான பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பழைய காகித நோட்டுகள் செல்லாதா?
பழைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள்:
•காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.
• தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.
•இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினம்.
ரூ.10, ரூ.20 போன்ற குறைந்த மதிப்பு கொண்ட காகித நோட்டுகள் மக்களிடையே அதிகளவில் கைமாறுவதால் விரைவில் சேதமடைந்து பயன்பாட்டிற்கு ஒவ்வாமல் போகின்றன. இதனால் ரிசர்வ் வங்கிக்கு இவற்றை அடிக்கடி புதிதாக அச்சடிக்கும் செலவு அதிகரிக்கிறது.
இதைக் கட்டுப்படுத்தவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.