• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் 26 ஆண்டுகள் வாழ்ந்தும் குடியுரிமை இல்லை: ‘நாடற்றவர்’ ஆன பெண்ணுக்கு பாஸ்போர்ட் கிடைத்தது எப்படி?

Byadmin

Nov 28, 2026


டோலி வதாலியா
படக்குறிப்பு, மூன்று வருட முயற்சிக்குப் பிறகு டோலி வதாலியா இந்திய பாஸ்போர்ட் பெற்றார்.

    • எழுதியவர், கோபால் கடேஷியா
    • பதவி, பிபிசி குஜராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 26 வயதான டோலி பராய் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வந்தார். கனடாவின் கால்கரியில் பணிபுரிந்து வந்த கிலன் வதாலியா என்ற இளைஞரை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணச் சடங்குகள் மற்றும் இதர சம்பிரதாயங்கள் முடிவடைந்த பிறகு, டோலியை அவரது கணவருடன் கனடாவுக்கு அனுப்பி வைக்க வதாலியா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

டோலி உலகிலுள்ள எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் இல்லாதவர் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதனால், கனடா செல்வதற்கான டோலியின் திட்டம் தடைபட்டது. இதையடுத்து, அவர் பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களைத் தொடர்புகொண்டு அதிகாரிகளிடம் தனது தரப்பை எடுத்துரைத்தார். தனக்கு 25 நாட்கள் வயதாக இருந்த போதிருந்து ராஜ்கோட்டில் வசித்து வருவதாகவும், அங்கேயே படித்து, பணியாற்றியதாகவும், எனவே தான் இந்திய குடிமகள் என்றும் அவர் வாதிட்டார்.

ஆனால், பல்வேறு சட்டங்களைக் காரணம் காட்டி டோலி வதாலியாவின் வாதங்களை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து, அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் மனைவி ராஜ்கோட்டிலும், கணவர் கனடாவிலும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு கண்டங்களில் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

இருப்பினும், உள்ளூர் தலைவர்கள் டோலியின் பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, தற்போது டோலி வதாலியாவுக்கு நம்பிக்கை ஒளி தென்பட்டுள்ளது.

டோலி வதாலியா
படக்குறிப்பு, டோலி வதாலியா ராஜ்கோட்டில் கல்வி பயின்று, ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றினார்.

ஒரே இரவில் மொசாம்பிக்கை விட்டு வெளியேறிய பராய் குடும்பம்

கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டுக்கு, தனது தந்தை கேதன் பராய் 1995ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்காகச் சென்றதாக டோலி வதாலியா பிபிசியிடம் தெரிவித்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஏற்கெனவே அங்கு வசித்து வந்தனர்.

By admin