13
ஆறு நாடுகள் பங்குபற்றும் 15ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் அரை இறுதிப் போட்டிகள் டாக்கா தேசிய விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளன.
அதேவேளை, தெற்காசிய கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக வீடியோ உதவி மத்தியஸ்தர் (AFC) தொழில்நுட்ப முறைமை அரை இறுதிகள் மற்றும் இறுதிப் போட்டிகளின்போது பயன்படுத்தப்படவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை பூட்டான் எதிர்த்தாடவுள்ளது.
பி குழுவில் பாகிஸ்தான் (3 – 2), மாலைதீவுகள் (1 – 0) ஆகிய அணிகளை இந்தியா வெற்றிகொண்டது.
பூட்டான் தனது ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷிடம் 0 – 1 என தோல்வி அடைந்ததுடன் இலங்கையுடனான இரண்டாவது போட்டியை 2 – 2 என சமப்படுத்திக்கொண்டது.
உலக கால்பந்தாட்ட தரவரிசையில் இந்தியா 138ஆவது இடத்திலும் பூட்டான் 192ஆவது இடத்திலும் இருக்கின்றன.
எனவே, பூட்டானுக்கு எதிரான போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா இலகுவாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான பங்களாதேஷை பாகிஸ்தான் சந்திக்கவுள்ளது.
ஏ குழுவில் பூட்டான் (1 – 0), இலங்கை (4 – 0) ஆகிய அணிகளை பங்களாதேஷ் வெற்றிக்கொண்டு தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாடவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடும் சவால் விடுத்து 2 – 3 என தோல்வி அடைந்த பாகிஸ்தான் 2ஆவது போட்டியில் மாலைதீவுகளை 3 -0 என இலகுவாக வெற்றி கொண்டது.
உலக கால்பந்தாட்ட தரவரிசையில் பங்களாதேஷ் 182ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 197 ஆவது இடத்திலும் இருக்கின்றன.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான தரவரிசையில் 15 இடங்கள் வித்தியாசம் இருக்கின்ற போதிலும் இந்த அரை இறுதிப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.