படக்குறிப்பு, கொள்ளை சம்பவம் தொடர்பாக மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கட்டுரை தகவல்
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மீனாட்சி என்ற பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரிடம் இதுதொடர்பாக விசாரித்து வருவதாகவும், கொள்ளையடித்ததாக சந்தேகிக்கும் நபரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் வீட்டில் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மீனாட்சி அளித்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கொள்ளையடிக்கப்பட்ட நகையில் ஒரு பகுதி மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடித்த நபரை பிடித்து, எஞ்சிய நகைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறுகிறது.
என்ன நடந்தது?
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, மதுரை நகைக்கடை கொள்ளை; சமூக ஊடக பிரபலம் கைது
தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி?
மதுரை பழங்காநத்தம் புறவழிச்சாலையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயின.காலையில் கடைக்கு வந்த ஊழியர்கள் நகைகள் காணாமல் போயிருப்பதை அறிந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
முகத்தை மறைத்தபடி நபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
நகைக்கடை கட்டடத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாக அந்த நபர் மேலே சென்று, மின்தூக்கிக்காக அமைக்கப்பட்டிருந்த பகுதி வழியாகக் கடைக்குள் நுழைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, இந்தச் சம்பவத்தில் 10 கிலோ தங்க நகைகளும், 1.5 கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் கூறினார்.
நவம்பர் 5-ல் கொள்ளைக்கு ஒத்திகையா?
கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு நகைக்கடையின் முந்தைய நாட்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில், நவம்பர் 5ஆம் தேதியே நகைக்கடைக்குள் நுழைய முயற்சி மேற்கொள்ளப்பட்டதற்கான காட்சிகள் கிடைத்துள்ளதாகக் காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொள்ளை நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே கடைக்குள் நுழைவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்
நவம்பர் 5ஆம் தேதி கடைக்குள் நுழைய முயன்ற நபருக்கும், நவம்பர் 12ஆம் தேதி கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெறுகிறது என்றார்
பிரபல யூடியூபர் கைது
இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றமாக மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய மதுரை காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் உறுதிப்படுத்தினார்.
“நகைக்கடைக்கு அருகில் பழங்காநத்தத்தில் வசித்த நபரே கொள்ளையில் ஈடுபட்டதாக கருதுகிறோம். சந்தேக நபரின் வீட்டில் நேற்று மாலை பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளையடித்ததாக சந்தேகிக்கும் நபரை தொடர்ந்து தேடி வருகிறோம். அவரை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட மீனாட்சி என்பவர் பிரபல யூடியூபர் ஆவார். அவர் அளித்த தகவலின் பேரில், குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கொள்ளை போன நகைகளில் ஒரு பகுதியை மீட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பட மூலாதாரம், Meenakshi_nachiyar/Instagram
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட மீனாட்சி என்பவர் பிரபல யூடியூபர் ஆவார்.
கொள்ளை போன நகைகள் எவ்வளவு?
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 10 கிலோ தங்க நகைகளும், 1.5 கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வழக்கில் மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களைக் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
மீட்கப்பட்ட நகைகளை எடைபோடுவதற்குத் தேவையான எடை இயந்திரங்கள் தனிஷ்க் ஜுவல்லர்ஸ் கடையில் இருந்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை மீட்கப்பட்டுள்ள நகைகளின் மொத்த எடை, ஒவ்வொரு நகையின் எடை உள்ளிட்டவற்றை கணக்கிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னரே மீட்கப்பட்ட நகைகளின் மொத்த அளவு மற்றும் மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் தெரியவரும்.