பட மூலாதாரம், Handout
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மத்திய அரசின் ‘கிசான் கிரெடிட் கார்டு’ திட்டத்தில் கல்லூரி மாணவர்களின் தரவுகளை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக, 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
“ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு மோசடி வலையில் சிக்குவோம் என எதிர்பார்க்கவில்லை. இதனால் கல்விக்கடன், வணிகக் கடன் என எதையும் பெற முடியவில்லை. என்னைப்போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறுகிறார், சேலம் அம்மாபேட்டையில் வசிக்கும் முஷ்ரப் பாஷா.
கடனைத் திருப்பி செலுத்துமாறு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்த பிறகே மோசடி குறித்து தெரியவந்ததாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் மோசடி அரங்கேறியது எப்படி?
கல்லூரி மாணவர்கள் புகார்
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அதிர்ச்சியூட்டும் புகார் மனு ஒன்றை சில கல்லூரி மாணவர்கள் அளித்தனர்.
‘சேலம் சின்ன திருப்பதியைச் சேர்ந்த கே.கண்ணகி என்பவர் தங்களை அணுகி, தான் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருவதாகவும் அதற்காக வரும் பங்களிப்புத் தொகையான 1 லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்’ என்று கூறியதாகப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அவ்வாறு வரவு வைக்கப்படும் தொகையை வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றினால் ஆயிரம் ரூபாய் கமிஷனாக தரப்படும் எனக் கூறினார். இதனை நம்பி அவர் கூறியதைக் கேட்டோம். தற்போது 1 லட்ச ரூபாய் கடன் நிலுவையில் உள்ளதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது’ என்று அந்த புகார் மனுவில் கல்லூரி மாணவர்கள் கூறியிருந்தனர்.
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் மோசடி
பட மூலாதாரம், PIB
புகார் மனு மீது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கறவை மாடு வாங்குவதற்கான கடனை வங்கியில் இருந்து பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
விவசாயிகள் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருள்களை வாங்குவதற்கும் கால்நடை வளர்ப்பதற்கும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் பயன்படுகிறது.
1998ஆம் ஆண்டு மத்திய அரசால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்காக இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விவசாயிகளின் சாகுபடி மற்றும் பிற தேவைகளுக்காக வங்கிகளில் இருந்து சரியான நேரத்தில் கடன் ஆதரவை ஒற்றை சாளர திட்டத்தின்கீழ் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்ததாக, மத்திய அரசின் தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை சார்ந்த செயல்பாடுகளுக்கு எந்தவித பிணையும் அளிக்காமல் அதிகபட்சம் 2 லட்ச ரூபாய் கடன் பெற முடியும் என மத்திய அரசு கூறுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் கடன் பெறுவதற்காக மாணவர்களின் வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை போன்றவை மோசடியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக சேலம் மாநகர காவல்துறை கூறியுள்ளது.
கல்லூரி மாணவர்கள் கூறியது என்ன?
பட மூலாதாரம், Handout
“ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ கணிப்பொறி அறிவியல் படித்தேன். கடந்த மே மாதம் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டேன். இன்னும் வேலையே கிடைக்கவில்லை. அதற்குள் கிசான் கிரெடிட் கார்டு பிரச்னையால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்” எனக் கூறுகிறார், முஷ்ரப் பாஷா.
இவர் சேலம் அம்மாபேட்டையில் வசித்து வருகிறார். இவரது தந்தை முஸ்தபா ஆட்டோ ஓட்டுநராக பணிசெய்து வருகிறார். மோசடி கும்பல் தன்னை அணுகியதைப் பற்றி விவரிக்கும் முஷ்ரப் பாஷா, “கடந்த ஜனவரி மாதம் என்னை அணுகி, ‘அறக்கட்டளைப் பணத்தை மாற்றிவிட்டால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்’ எனக் கூறினர்” என்கிறார்.
“அவர்களிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘அறக்கட்டளையைப் பராமரிப்பதற்கு பணம் வருகிறது. வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் அட்டை இருந்தால் தான் பணத்தை மாற்ற முடியும்’ எனக் கூறி அதனை எடுத்து வருமாறு கூறினர்” என்கிறார் அவர்.
இதன்பிறகு சேலம் கோரிமேட்டில் உள்ள ஃபெடரல் வங்கியின் கிளைக்கு மாணவர்களை ஒரு கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. “அங்கு ஐந்து நிமிடங்களில் என்னுடைய வங்கிக் கணக்குக்கு 97,600 ரூபாய் பணம் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் கியூ.ஆர் கோடு ஸ்கேனர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயை கழித்துவிட்டு மீதி பணத்தை அனுப்புமாறு கூறினர்” என அவர் கூறுகிறார்.
“வங்கியில் இருந்து எங்கள் கணக்குக்கு வரவு வைக்கப்பட்ட பணத்தில் ஆயிரம் ரூபாயை கமிஷனாக கொடுத்தனர். என்னைப் போல மேலும் சில மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இதை ஒருகட்டத்தில் மறந்துவிட்டோம். கடந்த செப்டம்பர் மாதம் தான் மோசடி குறித்து தெரிந்தது” என்கிறார் முஷ்ரப் பாஷா.
வங்கி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ்
ஃபெடரல் வங்கியின் சேலம் ராமகிருஷ்ணா கிளையில் இருந்து கடன் தொகையைத் திரும்ப செலுத்துமாறு கடந்த செப்டம்பர் மாதம் பலருக்கும் நோட்டீஸ் வந்ததாக அவர் தெரிவித்தார்.
அதில், ‘உங்கள் கிசான் கிரெடிட் கார்டு கணக்கு எண்ணில் கடந்த 25.10.2026 வரை நிலுவையாக உள்ள 5951 ரூபாய் வட்டியை உடனே செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
‘கடன் ஒப்புதல் விதிமுறைகளின்படி, இந்த நிலுவைத் தொகை ஆண்டுக்கு 18 சதவீத கூடுதல் அபராதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்படும் வரை இந்த அபராத கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும்’ எனவும் வங்கியின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கூடுதல் கட்டணங்கள் சேர்வதைத் தடுக்கவும் கணக்கை சீராக வைத்திருக்கவும் கிரெடிட் ஸ்கோர் குறைவதைத் தவிர்க்கவும் நிலுவையில் உள்ள வட்டியை விரைவில் செலுத்த வேண்டும். அவ்வாறு தவறினால் வங்கி விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“இப்படியொரு எச்சரிக்கை நோட்டீஸை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” எனக் கூறுகிறார், சேலத்தில் வசிக்கும் யாசர். இவர் கடந்த மே மாதம் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த சில வாரங்களாக வங்கியில் இருந்து நோட்டீஸ் வரத் தொடங்கியது. பிறகு சில முகவர்கள் நேரில் வந்து மிரட்டினர். இதனால் பயந்துபோய் கோரிமேட்டில் உள்ள ஃபெடரல் வங்கியின் கிளைக்குச் சென்றோம்” என்கிறார் அவர்.
வங்கியில் கிசான் கிரெடிட் கார்டு மூலமாக கறவை மாடுகளை வாங்குவதற்கான லோன் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, சின்ன திருப்பதி பகுதியில் இயங்கும் அந்த குறிப்பிட்ட அறக்கட்டளையின் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர்.
“அங்கு எங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில், ‘படிப்படியாக கடனை அடைத்துவிடுகிறோம்’ எனக் கூறி ஒரு தாளில் எழுதிக் கொடுத்தனர். இதுவரை அவர்கள் பணத்தை செலுத்தவில்லை” என்கிறார் யாசர்.
‘வாங்காத லோனுக்கு சிபில் ஸ்கோர்’
பட மூலாதாரம், Handout
“நான் மட்டுமல்ல. என்னை நம்பி பத்து பேர் கையெழுத்துப் போட்டு ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டனர். அவர்களும் நோட்டீஸை எதிர்கொண்டுள்ளனர்.” என அவர் வேதனைப்பட்டார்.
சேலத்தில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஏமாந்துள்ளதாகக் கூறுகிறார், முஷ்ரப் பாஷா. “காவல்துறையில் புகார் கூறிய பிறகு தாங்களும் ஏமாந்ததாக பலரும் புகார் கொடுக்க வருகின்றனர். வாங்காத லோனுக்காக சிபில் ஸ்கோர் பிரச்னையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்” என்கிறார் அவர்.
“கல்லூரி படிப்பை முடித்த பிறகு இன்னமும் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில் செய்யலாம் என்றால் கடனுக்கான வட்டி, அசல் கட்டாததால் எங்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளதாகக் காட்டுகிறது. எப்போது தீர்வு கிடைக்கும் எனத் தெரியவில்லை” என்கிறார் முஷ்ரப் பாஷா.
“என்னைப் போல பலருக்கும் ஃபெடரல் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் காவல்துறையில் புகார் கொடுக்க வந்துள்ளனர். சுமார் 7,500 பேருக்கு கிசான் கிரெடிட் கார்டு லோன் கொடுத்துள்ளதாக வங்கித் தரப்பில் கூறுகின்றனர்” என்கிறார், காவல்துறையில் புகார் கொடுப்பதற்காக வந்திருந்த வசந்த் என்பவர்.
மாணவர்களின் செல்போன் எண்ணுக்குப் பதிலாக போலியான செல்போன் எண்ணைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த யாசர், “நாங்கள் லோன் பெற்றிருந்தால் செல்போனுக்கு குறுந்தகவல் வந்திருக்கும். அப்படி எந்தவொரு தகவலும் வரவில்லை. போலியாக வேறு ஒரு செல்போன் எண்ணைப் பயன்படுத்தியுள்ளனர்” என்கிறார்.
‘500 பேர் வரை மோசடி… 8 பேர் கைது’ – காவல்துறை
பட மூலாதாரம், Handout
ஃபெடரல் வங்கியின் கிளை ஊழியர்களுக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, புகார் கொடுத்தவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆனால், வங்கி மூலமாகவே இந்த மோசடி வெளியில் வந்ததாகக் கூறுகிறார் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் கீதா. “வங்கி ஊழியர்களிடம் விசாரித்தவரையில், அவர்கள் மீது எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், வங்கியில் தவறு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“கல்லூரி மாணவர்கள், படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்கள் ஆகியோரை இலக்காக வைத்து ஏமாற்றியுள்ளனர். அந்தவகையில் சுமார் 500 பேர் வரை ஏமாந்துள்ளனர்” என்றார் அவர்.
“மோசடி வழக்கில் முதலில் அறக்கட்டளையை நடத்தி வந்த கண்ணகி, முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார் துணை ஆணையர் கீதா.
கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் வங்கிக் கடன் பெற முற்படும்போது பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது, ” இதைப் பற்றி வங்கி நிர்வாகிகளிடம் பேசியுள்ளோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை வைத்து மாணவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்யுமாறு கூறியுள்ளோம்” என்கிறார்.
வழக்கில் கைதான நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வழக்கில் இணைத்துள்ளதாகக் கூறிய காவல் துணை ஆணையர் கீதா, “பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்” எனக் கூறுகிறார்.
“தற்போது கைதான நபர்கள் மீது முன்னதாக வேறு எந்த மோசடி வழக்குகளும் நிலுவையில் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
காவல் ஆணையாளர் விளக்கம்
பட மூலாதாரம், SpecialArrangements
‘கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலமாக சுமார் 75 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றிருக்கலாம்’ எனக் கூறப்படுவது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபுவிடம் பிபிசி தமிழ் பேசியது.
“வங்கித் தரப்பில் ஏழாயிரம் பேருக்கு மேல் பயனாளிகள் உள்ளதாகக் கூறுகின்றனர். இவர்களில் உண்மையான பயனாளிகளும் உள்ளனர். தற்போது வரை சுமார் 33 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் வந்துவிட்டதாக வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ஃபெடரல் வங்கி கிளை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது. வழக்கு விசாரணையில் இருப்பதால் இதுதொடர்பான விவரங்களை அளிக்க முடியாது என்று அவர்கள் தரப்பில் பதில் தரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் இருப்பதால் அவர்கள் தரப்பு விளக்கங்களை பெற முடியவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு