• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

மலப்பம்பள்ளி மணல் திருட்டு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான எ.வ.வேலு

Byadmin

Nov 14, 2026


திமுக இளைஞரணி மாநாட்டிற்காக முறைகேடாக மண் அள்ளியதாக புகார் எழுந்துள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.

திருவண்ணாமலை அடுத்த மலப்பம்பள்ளி பகுதியில் தனியார் கட்டுமான இடத்தின் இயக்குநராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் குமரன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருவண்ணாமலையில் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுக நடத்திய இளைஞரணி மாநாட்டிற்காக, அந்த இடத்தை சமன் செய்வதற்கு மலப்பம்பள்ளி ஏரியில் இருந்து சுமார் 45 லட்சத்து 72 ஆயிரத்து 58 கன அடி மண்ணை முறைகேடாக அள்ளியதாக கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், அறப்போர் இயக்கத்தின் சார்பில் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், இதன் காரணமாக அரசுக்கு ரூபாய் 8.22 கோடி அளவில் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

என் மீது ஒரு தவறான, பொய்யான ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தார்கள். நான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன்.

மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதில் தவெக அரசு கவனம் செலுத்துகிறது.

எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது.

கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியின் போதும், என்மீது தொடரப்பட்ட வழக்கில், நான் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதேபோன்று தற்போது திட்டமிட்டு என் மீது ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். இதிலுருந்தும் நிச்சயம் நான் வெளியே வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin