7
தமிழ் சினிமாவில் குறைந்த முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடித்து வரும் நடிகர் லியோ சிவகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பாட்டில் கேங்..’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தில் லியோ சிவக்குமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதய் தீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை அசாஸி கிரியேசன்ஸ் மற்றும் சாண்டி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வர்றது பாட்டில் கேங் இன்னொரு பேரு பேட்டில் கேங்..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் டி( Thee) எழுதி பின்னணி பாடியிருக்கிறார். ராப் மற்றும் துள்ளல் இசை பாணியில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இளம் தலைமுறை இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.