பட மூலாதாரம், TN GOVT
-
- எழுதியவர், சாரதா வி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் பெரியளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் எந்த ஆட்சி சிறப்பானது என்ற விவாதம் அவ்வப்போது முன்னுக்கு வருகிறது. முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தைத் தொடர்ந்து அந்த விவாதம் மீண்டும் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளது. அத்துடன் இந்திய நிறுவனத்துடன் லண்டனில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விஜயின் இங்கிலாந்து பயணத்தின் விளைவாக இதுவரை சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான உறுதிமொழிகள் கிடைத்திருப்பதாகவும், 9,400-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநில அரசு கூறுகிறது.
- வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து குறிப்பிடத்தக்க அறிவிப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் முதலீட்டு வழிகாட்டி அமைப்பான ‘வழிகாட்டுதல் தமிழ்நாடு’ (Guidance Tamil Nadu) உடன் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, அசெம்பிளி மற்றும் தளவாட வசதிகள் அடங்கும். இதன் மூலம் சுமார் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மற்றொரு ஒப்பந்தத்தில் ஈ.ஒய் (EY) நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கான உலகளாவிய திறன் மையத்தை அமைத்து நிர்வகிப்பதற்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இதன் மூலம் 400 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திருச்சி மற்றும் சென்னையில் தனது உலகளாவிய திறன் மையங்களை இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவுபடுத்துவதற்கு உறுதியளித்துள்ளது.
முதலமைச்சரின் முதல் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை விட ஊடக வெளிச்சத்தை அதிகம் ஈர்த்துள்ளது என்று விமர்சிப்பவர்களுக்கு, இந்த அறிவிப்புகள் அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் பதிலாக இருக்கின்றன.
ஆனால் முக்கியமான கேள்வி வேறு ஒன்று: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு என்ன நடக்கும்? எப்போது இந்த முதலீட்டு உறுதிமொழிகள் தொழில் திட்டங்களாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்?
முதல்வர் லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்பே முதலீட்டை ஈர்ப்பது விஜய் அரசின் முக்கிய மைல்கல்லாக முன்வைக்கப்பட்டதால் இந்தக் கேள்வி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.