• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

Byadmin

Oct 4, 2026


பிரபல திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (95) சென்னையில் நேற்று சனிக்கிழமை இரவு (03) காலமானார்.

சென்னையில் வசித்து வந்த இயக்குநர் சங்கீதம் சீனிவாச ராவ் முதுமையின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக தனியார் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1931 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஆந்திராவில் பிறந்த சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டதாரியான பின் திரைப்படத்துறையின் மீதான அதீத ஆர்வம் காரணமாக அந்த காலகட்டத்திய பிரபல இயக்குநர் கே. வி. ரெட்டியிடம் உதவியாளராக இணைந்தார்.‌

அதனைத் தொடர்ந்து 1974 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான ‘திக்கற்ற பார்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘ராஜபார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த படங்களை இயக்கினார்.

இதனை அடுத்து ‘இளைய திலகம்’ பிரபு நடித்த ‘சின்ன வாத்தியார்’ உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இவர் தமிழில் இயக்கியுள்ளார்.

திரைக்கதையில் புதுமையான அணுகுமுறை -தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் அலாதியான ஆர்வம் கொண்ட இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநராக மட்டும் பணியாற்றாமல்  எழுத்தாளர் – கதாசிரியர்- தயாரிப்பாளர்- இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக ஆளுமை திறன் கொண்ட கலைஞருமாவார்.

இவர் தன்னுடைய 94 ஆவது வயதில் ‘சிங் கீதம் ‘எனும் பெயரில் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பில் உள்ள ‘கல்கி கி.பி. 2868’ படத்தின் திரைக்கதையிலும் இவருடைய பங்களிப்பு உள்ளது.

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவிற்கு இளையராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்கள் மூலமாக தங்களது இரங்கல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

By admin