• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

இரு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீராங்கனை சியாரா மேகீன் தனது 34ஆவது வயதில் காலமானார்

Byadmin

Nov 3, 2026


அயர்லாந்து சார்பில் இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பிரபல நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீராங்கனை சியாரா மேகீன், தனது 34ஆவது வயதில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வடக்கு அயர்லாந்தின் போர்டஃபெர்ரி பகுதியைச் சேர்ந்த சியாரா மேகீன், கடந்த 2025 மே மாதம்  குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் சூழ்ந்திருக்க அவர் உயிரிழந்ததாக அவரது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அன்பான மகள், சகோதரி, மனைவி, தோழி மற்றும் பலருக்கு முன்னுதாரணமாக விளங்கிய அவர் அனைவராலும் ஆழமாக நினைவுகூரப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயர்லாந்து சார்பில் 2016ஆம் ஆண்டு ரியோ மற்றும் 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அவர், குதிகால் தசைநார் காயம் காரணமாக 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும், 2024ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று தனது தொழில்முறை வாழ்க்கையின் முதலாவது உயர்ந்த சம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக, 2022ஆம் ஆண்டு பேர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இளம் வயதிலிருந்தே தடகள விளையாட்டில் திறமையை வெளிப்படுத்திய மேகீன், 2010ஆம் ஆண்டு உலக இளையோர் தடகள சம்பியன்ஷிப் மற்றும் 2011ஆம் ஆண்டு ஐரோப்பிய இளையோர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 1500 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

2010ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் 18 வயதில் 1500 மீற்றர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

எனினும், ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட கடுமையான கணுக்கால் காயம் காரணமாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார். 2013ஆம் ஆண்டு சத்திரசிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் போட்டிகளில் களமிறங்கிய அவர், 2014 ஜூலை மாதம் அயர்லாந்தின் 1500 மீற்றர் தேசிய சம்பியன் பட்டத்தை வென்றார்.

2016ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். அதே ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிவரை முன்னேறியிருந்தாலும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை.

2019ஆம் ஆண்டு ஐரோப்பிய உள்ளரங்க தடகள சம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், 2020ஆம் ஆண்டு மொனாக்கோ டயமண்ட் லீக் போட்டியில் 1000 மீற்றர் ஓட்டத்தை 2 நிமிடங்கள் 31.06 செக்கன்களில் நிறைவுசெய்து, சோனியா ஓ’சல்லிவனின் 27 ஆண்டுகால அயர்லாந்து சாதனையை முறியடித்தார்.

2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்தசை காயம் காரணமாக பயிற்சிகள் பாதிக்கப்பட்டதுடன், ஆரம்பச் சுற்றிலேயே வெளியேறினார்.

2022ஆம் ஆண்டு முன்னாள் பிரித்தானிய ஒலிம்பிக் வீராங்கனை ஹெலன் கிளித்தரோவின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பான போட்டியை வெளிப்படுத்திய அவர், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 1500 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

அதே ஆண்டு பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனைகளைப் பின்னுக்குத் தள்ளி 1500 மீற்றர் ஓட்டத்தில் வெற்றிபெற்றார். 3 நிமிடங்கள் 56.63 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த அவர், சோனியா ஓ’சல்லிவனின் அயர்லாந்து சாதனையையும் முறியடித்து, நான்கு நிமிடங்களுக்குள் ஓட்டத்தை நிறைவுசெய்தார்.

2023ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீற்றர் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றார். அதே ஆண்டு அயர்லாந்தின் மைல் ஓட்ட சாதனையையும் முறியடித்ததுடன், பிபிசி வடக்கு அயர்லாந்தின் ஆண்டின் சிறந்த விளையாட்டு ஆளுமையாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

2024ஆம் ஆண்டு ரோம் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீற்றர் இறுதிப் போட்டியை 4 நிமிடங்கள் 04.66 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றது அவரது விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்தது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் எதிர்பார்ப்புடன் இருந்த அவர், போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட குதிகால் தசைநார் காயம் காரணமாக விலகினார்.

கடந்த 2025ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். தனது விளையாட்டு வாழ்க்கை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், பலருக்குக் கிடைக்காத வாய்ப்புகள் தனக்குக் கிடைத்தமைக்காக நன்றியுடையவராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் தனது நீண்டகால காதலரான தோமஸ் மோரனை பெல்பாஸ்டில் நடைபெற்ற எளிமையான சிவில் திருமண நிகழ்வில் அவர் கரம்பிடித்திருந்தார்.

சியாரா மேகீனின் மறைவுக்கு அயர்லாந்து தடகள சம்மேளனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. துணிவு, அன்பு மற்றும் அளப்பரிய மனவலிமை கொண்ட வீராங்கனையாக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

By admin