இலங்கையை சர்வதேச விளையாட்டு சுற்றுலா மையமாக மாற்றும் “கொழும்பு மாரத்தான் 2026” எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கொழும்பு மாரத்தான்” (Colombo Marathon) ஓட்டப்பந்தயம் செப்டம்பர் மாதம் கொழும்பில் நடைபெறும் என இன்று (27) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கையை சர்வதேச விளையாட்டு சுற்றுலாத் தலமாக உலக வரைபடத்தில் ஒரு முக்கிய இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த நிகழ்வு பெரிதும் உதவும் என வலியுறுத்தினார்.
4,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ள இந்த மாரத்தான் போட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கு இலங்கை வழங்கும் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு காரணியாகவும் அமையும்.
இந்த போட்டி ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறும்:
முழு மாரத்தான் (42.195 கி.மீ.)
அரை மாரத்தான் (21.097 கி.மீ.)
10 கி.மீ. ஓட்டப்பந்தயம்
5 கி.மீ. வினோத ஓட்டம் (Fun Run)
சிறுவர்களுக்கான மினி ஓட்டம் (1–2 கி.மீ.)
இதன் தொழில்நுட்பப் பணிகளுக்காக இலங்கை தடகள சங்கத்தின் 100 தகுதிவாய்ந்த நடுவர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அருண பண்டார, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், தடகள சங்கத்தின் தலைவர் பிமல் விஜயசிங்க மற்றும் தேசிய தொழில்நுட்ப அதிகாரி எச்.டி.ஜே. ரத்னசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.







The post இலங்கையில் “கொழும்பு மாரத்தான் – 2026” | செப்டம்பரில் நடைபெறும்! appeared first on Vanakkam London.