• Mon. Oct 12th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கையில் மகிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி இருவரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி – என்ன காரணம்?

Byadmin

Oct 12, 2026


இலங்கையில் மகிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி இருவரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி - என்ன காரணம்?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஸ, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பல்லெதென்ன பிபிசி சிங்கள சேவையிடம் பேசுகையில், விசேட மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று (அக்டோபர் 12) கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

“சிறைச்சாலை மருத்துவமனையின் விசேட மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த இதய நோய் நிபுணர் ஒருவர், அவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பரிந்துரைத்தார். அதற்கிணங்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,” என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

ஷிரந்தி ராஜபக்ஸ ஏன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்?

‘சிறிலியா சவிய’ அறக்கட்டளைக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு ஒன்றில் தேசிய சேமிப்பு வங்கி 100 லட்ச ரூபாயை வரவு வைத்தது தொடர்பான ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் குற்றவியல் ரீதியாக நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டார். லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஷிரந்தி ராஜபக்ஸஷ மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் அப்போதைய தலைவர் பிரதீப் காரியவசம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தியது.

ஷிரந்தி ராஜபக்ஸவை அக்டோபர் 13-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது; அதேவேளையில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

By admin