பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஹெலினா வில்கின்சன் மற்றும் ஹென்றி மூர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பிரிட்டனில் ஒரு பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தனது முன்னாள் துணையை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். ஆனால் அந்தக் குழந்தைகள் உண்மையில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என என நீதிமன்றம் கருதியது. இதை, உயர் நீதிமன்ற நீதிபதி, “அசாதாரணமான”, “மிகவும் விரிவான ஏமாற்று நடவடிக்கை” என்று வர்ணித்தார்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த ஆண், நீதிமன்றத் தீர்ப்பில் ‘ஜான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அந்தப் பெண் தங்களது இரண்டு குழந்தைகளையும் சேர்த்து 500 பவுண்டுகளுக்கு விற்றுவிட்டதாக அவரிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்.
இரண்டு ஆண்டுகளில், அந்தப் பெண் குழந்தைகளின் புகைப்படங்களையும் குறுஞ்செய்திகளையும் அவருக்கு அனுப்பியதாகவும், அவரிடம் இருந்து சுமார் 30,000 பவுண்டுகளை (ரூ 38 லட்சம்) பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரியில் நடந்த விசாரணையின்போது, ‘ஜேன்’ என்று குறிப்பிடப்பட்ட அந்தப் பெண், பழிவாங்கும் நோக்கில் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் கூறியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அந்த ஆண் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
2022-ஆம் ஆண்டின் இறுதியில், அந்தப் பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தனது துணையிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அல்ட்ராசவுண்ட் படத்தையும் அவருக்கு அனுப்பியிருந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் உண்மையில் கர்ப்பமாக இருப்பது போல ”வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியதால்”, அந்த ஆண் தான் குழந்தையின் தந்தை என்று நம்பினார்.