• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டனில் நினைவேந்தல் நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

Byadmin

Oct 4, 2026


மேற்கு லண்டனில் சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்துகொண்ட நினைவேந்தல் நிகழ்வொன்றின் போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார். கொடூரமான முறையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கொலைக் குற்றப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஈஸ்ட் ஆக்டன் பகுதியிலுள்ள பிரேப்ரூக் வீதி மற்றும் எர்கான்வால்ட் வீதி சந்திப்பில் பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, வெள்ளிக்கிழமை இரவு 7:47 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பொலிஸாருடன் இலண்டன் அம்பியூலன்ஸ் சேவைப் பிரிவினரும் இணைந்து காயமடைந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்க முற்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியப் பிரிவினர் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை விரைவில் நடைபெறவுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயமே மரணத்துக்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், பிரேப்ரூக் வீதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொலிஸ் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான விசேட ஆதரவுப் பணிகள் பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளை வழிநடத்தும் பிரதான துப்பறியும் பரிசோதகர் பிரையன் ஹோவி கருத்துத் தெரிவிக்கையில், துயரார்ந்த நினைவேந்தல் நிகழ்வில் ஒன்று கூடியிருந்த குடும்பத்தினர் மத்தியில் அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் கூடியிருந்த வேளையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து உண்மை தெரிந்த நபர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி முன்வந்து சாட்சியமளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post இலண்டனில் நினைவேந்தல் நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு appeared first on Vanakkam London.

By admin