• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை யாருக்காக? | அ. நிக்ஸன்

Byadmin

Jul 14, 2026


* சிங்களத் தலைவர்களின் சமரசம் செய்ய முடியாத ஒற்றை நிலைப்பாடு..
* இந்தோ – பசுபிக் கொள்கைக்கு ஒத்துழைக்கும் பின்னணியில்!!!
* சுயநிர்ணய உரிமை பற்றி துணிந்து பேசத் தயங்கும் சூழலில்!

”ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை” (Eelam Tamil Constituent Assembly) என்ற கட்டமைப்பு உறுப்பினர்கள், சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் கூடியபோது முக்கியமான மூன்று முடிவுகளை எடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர்.

சாதாரண பொதுமக்களுடன், கல்வியாளர்கள், துறை சார்ந்தவர்கள், கலந்துரையாடி எடுக்கும் முடிவுகள், அதாவது கீழ் இருந்து மேல் நோக்கி வரும் தீர்மானங்கள், ஈழத்தமிழ் அரசியல் சூழலில் மிக முக்கியமானது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போன்ற கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் கட்சி அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சிவில் சமூகப் பிரதிநிதிகள், புலம்பெயர் அமைப்புகள் ஆகியோருடன் இணைந்து ஒரு கட்டமைப்பாக இயங்க வேண்டும் என வியாக்கியானம் செய்து களைத்துப்போன ஒரு பின்னணியில், இந்த அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபை ஆரம்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சிங்களப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்ற பொறிமுறைகளுக்குள் நிரந்தர அரசியல் தீர்வு சாத்தியமற்றது என்பதால், சர்வதேச அரங்கில் தமிழர்களின் கூட்டுப் பலத்தைக் காண்பிப்பதற்கான ”பொறிமுறை” ஒன்றை கட்டமைக்க வேண்டும் என்ற வாதம் 2009 இற்குப் பின்னரான சூழலில் இருந்து இன்று வரையும் மிகக் கடுமையாக நிலவுகிறது.

ஆனால், இப் பின்புலத்தில்தான் ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபை உருவானது என்று கற்பிதம் செய்ய இயலாது.

இருந்தாலும், அதன் உருவாக்கத்தின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கட்சிகளுடைய ‘பங்களிப்பு’ – ‘ஒத்துழைப்பு’ எவ்வாறானதாக இருக்கும் என்பதே கேள்வியாகும்.

அமெரிக்க, இந்திய அரசுகளின் இந்தோ-பசுபிக் பிராந்திய நலன்களோடு ஒத்துப் போகும் தமிழ்த் தேசிய கட்சிகள், இச்சபையின் கோட்பாடுகளுக்கு எந்தளவுக்கு உண்மையாகப் பங்களிப்பார்கள், ஒத்துழைப்பார்கள் என்ற அரசியல் வினா ஆழமான பொருள் கொண்டது.

இப் பொதுச் சபையின் பிரதான மூன்று பிரதான செயற்பாட்டுக் கருவூலங்கள், அந்த அரசியல் வினாவைக் கொண்டு வருகின்றன.

1) எவ்வாறான வரைவை முன்வைப்பது பற்றிய பொதுமக்கள் கலந்துரையாடல்; அந்த உரையாடல்கள் ஊடாக வெளிவரும் கருத்துக்களை வரைபில் உள்வாங்குதல்.

3) அநுர அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான தெளிவூட்டல்களை மேற்கொள்ளல்.

4) அநுர அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியல் யாப்பின் போது தமிழ் மக்கள் சார்பில் நகலைத் தயாரிப்பதற்கு ஒரு குழுவை நியமித்தல்.

இவைதான் அந்தப் பிரதான மூன்று கருவூலங்கள்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும், இதுவரை காலம் கோரி வந்த ”சர்வதேச நீதி பொறிமுறை” என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கிவிட்டனவா என்ற மற்றொரு பலத்த கேள்வியும் சந்தேகமும் எழுகிறது…

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபையின் செயற்பாடுகள், இலங்கை உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரிக்கும் சர்வதேச சமூகத்திற்கு சாதகமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வி – ‘சந்தேகம்’ எழுந்தாலும் அதனையும் மறுக்க முடியாது.

ஏனெனில், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக, இந்தோ-பசுபிக் பிராந்திய விவகாரங்களில் இலங்கை அரசின் ஒத்துழைப்பு தங்களுக்கு மிக அவசியம் என்று அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கருதுகின்றன.

ஆகவே, சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஓர் அரசியல் தீர்வை, ஈழத்தமிழர்கள் ஏற்க வேண்டும் என்பதே இந்த நாடுகளின் இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையாக 2009 இற்குப் பின்னர் மாறியுள்ளது.

ஆகவே, இதற்கு ஏற்ப ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபையின் நகர்வுகள் அமைகிறது என்று யாரும் சந்தேகித்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்.

இவ்வாறு எழும் சந்தேகங்களை, ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபை போக்க வேண்டுமானால், முதலில் சமகாலப் புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிச் சூழலை ஈழத்தமிழ் தரப்புக் கையாளக்கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும்.

அந்த வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப தமிழ்த் தேசியக் கட்சிகளும் செயல்பட வேண்டும்.

அதனை ஒழுங்கமைத்து நகர்த்த அரசியலமைப்பு நிபுணர்கள், கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு ‘பொதுக் கட்டமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாகவே, அந்த வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ‘சர்வதேச நீதி பொறிமுறை’ என்பதற்கான இராஜதந்திர அழுத்தங்களை உலக அரங்கில் வழங்க முடியும்..

குறிப்பாக, இலங்கைத்தீவில் வாழும் அரசியல் சமூகங்கள், நாடாளுமன்றத்துக்கு அப்பால், இணைந்த கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக தீர்வு அமைய வேண்டும் என்ற அரசியல் நியாயப்பாடுகளை சர்வதே மட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில், கட்சி அரசியலைக் கடந்து சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும், 2012 ஆம் ஆண்டின் முதலாவது ஐ.நா தீர்மானத்தில் இருந்து இன்று வரை, போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்களில் ‘உள்ளகப் பொறிமுறை’ (Domestic Mechanism) மூலமே தீர்வு காண்போம் என்ற ஒற்றை நிலைப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்து வருகின்றனர்…இது அன்று ஜேஆர் வகுத்த உத்தி…!

அதேநேரம், நடந்தது “இனஅழிப்பு“ என தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் சில புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து கூறி வந்தாலும், இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் அதாவது சிங்கள அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கு ஐ.நா கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது.

உதாரணமாக சென்ற 19 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டிருக்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆனால், செம்மணி அரியாலை சிந்துப்பாத்தி மயானப் பகுதிகளில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட மனித எலும்புகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சர்வதேச நீதி விசாரணைக்கான கோரிக்கைகளையும் மீறி, இலங்கை உள்ளக சட்டக் கட்டமைப்பிற்குள் தீர்வை முன்வைக்கும் முறைமை பற்றி அமைச்சர் விளக்கியிருக்கிறார்.

அப்போது குறுக்கிட்ட முன்னாள் வடமாகாண சபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய சில விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும், இதுவரை நடைமுறைக்கு வரவில்லையே எனக் கேள்விளைத் தொடுத்தபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாத்திரம் மொட்டையாக பதிலளித்து விட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர்..

ஐ.நாவின் அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட OMP எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி தகவல் அறியும் அலுவலகத்தின் செயற்பாட்டை, ஐ.நா பல சந்தர்ப்பங்களில் பாராட்டியது என்ற காரணத்தால், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உள்ளக நீதிக் கட்டமைப்பின் மூலம் விசாரணை என்று காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் விளக்கியிருக்கிறார்.

ஆகவே, சந்திரிகா, மகிந்த, ரணில், கோட்டாபய ஆகியோர் வழியில், அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இதே “உள்ளக நீதி” என்ற புள்ளியிலேயே பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.

ஆகவே, 80 வருடங்களுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை பற்றிய நியாயங்கள் இலங்கை அரசால் மறுதலிக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நீதியை நோக்கிய நகர்வுகளும் தேக்க நிலைக்கு வந்துவிட்டது என யாரும் கருத்திட்டால், அதில் ஆழமான அர்த்தம் இருக்கும்..

இத்தேக்க நிலைக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரதான காரண- காரியம் என்பதும் பகிரங்கமான உண்மை…

புவிசார் அரசியல் நோக்கில், வல்லாதிக்க அரசுகள், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிக்கிறது என்பதை விடவும், தமிழர்களின் அரசியல் பலத்தையும், சர்வதேச நீதிக்கான நகர்வுகளையும் தங்களின் சுயலாப கட்சி அரசியலாலும், ஒருமித்த குரல் ஒருங்கிணைப்பு இன்மையாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளே சிதைத்து வருகின்றன என்பதே கசப்பான யதார்த்தமாகும்.

செம்மணி, உலகின் மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்று, என வர்ணிக்கப்பட்டும் நிலையில், இதனை முழுமையாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் மற்றும் தடயவியல் துறையினர் ஆய்வுகளை வழி நடத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் சர்வதேச நிபுணர்களின் நேரடி தலையீட்டைக் கோரியபோது, டி.என்.ஏ (DNA) பகுப்பாய்வு போன்ற சில தடயவியல் தேவைகளுக்கு மாத்திரமே வெளிநாட்டு உதவிகளைப் பெற ஆலோசிப்பதாக அரசாங்கம் உடனடியாக மறுத்துப் பதில் வழங்கியுள்ளது.

ஆகவே, 1970 – 80 களில் இருந்து சிங்களத் தலைவர்கள் மாறி மாறி ஆட்சியமைத்தாலும் தத்தமது கட்சி அரசியலுக்கு அப்பால், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை விவகாரங்களில் ஒரு புள்ளியில் நிற்கின்றனர் என்பதையே அநுர அரசாங்கத்தின் மறுதலிக்கும் பதிலும் எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் ‘சர்வதேச நீதிப் பொறிமுறை’ – ‘இன அழிப்புக்கான சர்வதேச நீதி’ என்று உரத்துப் பேசினாலும், நடைமுறையில் அவர்கள் இலங்கை அரசின் உள்ளகக் கட்டமைப்புகளோடு இணங்கிப் போகும் சூழல், 2015 ஆம் ஆண்டு முதல் தெரிய ஆரம்பித்து.

2026 இல் அது பகிரங்கமாகவே வெளிப்பட்டுள்ளது…

இப் பின்புலத்தில்தான், இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ்கள் – நட்ட ஈடுகள் வழங்கி, ‘நாங்கள் உள்ளக ரீதியாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம்’ என்று சர்வதேச சமூகத்திற்குக் கணக்குக் காண்பித்து, ஐ.நா அழுத்தங்களில் இருந்து தப்பிக்கக் கூடிய அனைத்து இராஜதந்திர நகர்வுகளையும் கனகச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது.

ஆகவே, ஈழத்தமிழர்களின் ‘சர்வதேச நீதி பொறிமுறை’ என்ற கூட்டுக் கோரிக்கை அமெரிக்க, இந்திய அரசுகளின், இலங்கை மீதான அரசியல் – பொருளாதாரச் செல்வாக்கினால், இந்தோ – பசுபிக் விவகார நோக்கில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஆபத்துகள் உறுதியாகத் தெரிகின்றன.

இருந்தாலும், செம்மணி போன்ற பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்ந்து வெளிவருவது, இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அரங்கில் பெரும் தார்மீக நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஆனால், அதனை ஒரு ‘நம்பகமான’ – ‘உறுதியான’ ஆவணமாக்கி, இராஜதந்திர ரீதியில் நகர்த்துவதற்கான ஆற்றல் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருக்கும் இல்லை என்பதை விடவும், அவர்கள் அமெரிக்க – இந்திய அரசுகளினால் கையாளப்படும் சக்திகளாக மாத்திரமே திகழ்கின்றனர் என்பதே கண்கூடு.

இப்பின்னணியில், ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபையின் மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் தீர்வுக்கான நகல் வரைபு, யாரை நோக்கி, யாருக்காக மேற்கொள்ளப்படவுள்ளது என்ற வினா தொக்கி நிற்கிறது!

அதுவும், ஆறாம் திருத்தச் சட்டத்தைத் ”தாரக மந்திரம்” போல ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ”சுயநிர்ணய உரிமை” தான் நிரந்தர தீர்வு என்று துணிந்து சொல்ல தயங்கிக் கொண்டிருக்கும் இந்த 2026 ஆம் ஆண்டுச் சூழலில்…

ஆகவே, எந்த ஒரு அரசியல் கட்சியினதும் பின்புலங்களை கடந்து ”ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை” தனித்துவமான பெரும் அரசியல் சக்தியாக தமிழர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்..

சிங்கள அரசியல் தலைவர்கள் ”உள்ளகப் பொறிமுறை” என்ற சமரசம் செய்ய முடியாத ஒற்றை நிலைப்பாட்டை ஒரே புள்ளியில் நின்று தக்க வைப்பது போன்று, இச் சபையும், ”சுயநிர்ணய உரிமை” – ”சர்வதேச நீதி பொறிமுறை” என்ற  நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்…

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

By admin