• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

உக்ரைனுக்கு 1,000 நீண்டதூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்கும் இங்கிலாந்து!

Byadmin

Nov 20, 2026


ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்டதூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்கவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்ற உக்ரைனின் நட்பு நாடுகளான ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’ மாநாட்டிலேயே இந்த உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் போர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 260 மில்லியன் பவுண்ட் பெறுமதியான புதிய உதவித் திட்டத்தின் ஓர் அங்கமாக இவை வழங்கப்படவுள்ளன.

குறித்த ட்ரோன்கள் 625 மைல்கள் (1,000 கிலோமீற்றர்) தூரம் வரை பறக்கக்கூடியவை என்பதுடன், அதிக எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை என இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் இராணுவ உற்பத்தி நிலையங்களை உக்ரைனால் இலக்கு வைக்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தில் இங்கிலாந்தின் அதிகரித்து வரும் ஈடுபாட்டை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதுடன், இந்த உதவித் திட்ட நிதியில் 80 சதவீதம் இங்கிலாந்திலேயே செலவிடப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீனப் பிரதமர் ஷி ஜின்பிங் ஆகியோரைச் சந்திக்கும் தருணத்திலேயே பேர்லின் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

சீனாவில் நடைபெறும் ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இணையாக இடம்பெறவுள்ள இச்சந்திப்புக்கு முன்னதாகக் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், தானும் ஷி ஜின்பிங்கும் உக்ரைன் போர் முடிவுக்கு வருவதைக் காண விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

யுத்த நிறுத்தம் அல்லது சமாதான ஒப்பந்தம் எட்டப்படும் பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ள 36 நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு முன்னதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு உதவும் வகையில் கடல்சார், தளபாட விநியோக மற்றும் கண்காணிப்பு ட்ரோன்களையும் இங்கிலாந்து தயாரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கிய பிரதமர் பர்ன்ஹாம், குளிர்காலம் முழுவதும் ரஷ்யத் தாக்குதல்களிலிருந்து உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதை உறுதி செய்யப் இங்கிலாந்து தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தைகளின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பர்ன்ஹாம், உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் கூட்டணியின் மனநிலை முன்னெப்போதையும் விட உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் அமெரிக்கத் தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் கலந்துகொண்டதை வரவேற்ற அவர், ரஷ்யா சந்தித்துள்ள உயிரிழப்புகளைக் குறிப்பிட்டு, இப்போரினால் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தவர்களாக ரஷ்யாவே இருக்கக்கூடும் என விவரித்தார்.

By admin