7
உக்ரைன் போரில் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து இளவரசர் ஹாரி தெரிவித்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஹாரி இங்கிலாந்தின் பிரதிநிதியாகப் பேசவில்லை” என்று கூறியுள்ள டிரம்ப், அவரை விடத் தான் இங்கிலாந்துக்காக அதிகம் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இளவரசர் ஹாரி, உக்ரைனின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக அளித்த சர்வதேச ஒப்பந்த வாக்குறுதிகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தான் ஓர் அரசியல்வாதியாகப் பேசவில்லை, ஒரு மனிதாபிமான அடிப்படையிலும் இராணுவ வீரராகவும் மட்டுமே பேசுவதாக ஹாரி விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும், அமெரிக்கத் தலைமை தனது கடமைகளை மதிக்க வேண்டிய தருணம் இது என அவர் குறிப்பிட்டது டிரம்ப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டைக் கொண்டாட மன்னர் சார்லஸ் அமெரிக்கா பயணிக்கவுள்ள நிலையில், இந்த கருத்து மோதல் வெடித்துள்ளது.
சமீபகாலமாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் வெளியுறவுக் கொள்கைகளை விமர்சித்து வரும் டிரம்ப், ஹாரியின் கருத்துகள் தேவையற்றவை எனச் சாடியுள்ளார்.
அதேவேளை, மன்னரின் வருகை இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.