• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

உங்கள் மூளைக்கு உண்மையில் எத்தனை வயது? முதுமையை, மறதி நோயை தடுக்க முடியுமா?

Byadmin

Nov 7, 2026


இளமை, முதுமையற்ற நிலை, மூளை, மூளை ஆரோக்கியம், தொழில்நுட்பம், மனித மூளை

    • எழுதியவர், லாரா லெவிங்டன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும், வயதாகும்போது மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதன் மூலம், மூளையின் முதுமையடையும் செயல்முறையைப் புதிய தொழில்நுட்பங்களால் மெதுவாக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

ஓர் அழகான காலை வேளையில், லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு கிழக்கே சுமார் ஒரு மணிநேரப் பயணத் தொலைவில் உள்ள லோமா லிண்டா நகரில் வசிக்கும் மரிஜ்கே, அவரது கணவர் டாம் ஆகியோர் என்னைக் காலை உணவுக்கு தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தனர். நெதர்லாந்தை சேர்ந்த மரிஜ்கேவுக்கு வயது 76.

அவர்களின் காலை உணவு மேசையில் ஓட்ஸ், சியா விதைகள், பெர்ரி பழங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், சர்க்கரை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட தானிய உணவுகளோ காபியோ இல்லை. அவர்களின் எளிமையான, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், லோமா லிண்டா நகரின் வாழ்க்கை முறையையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

அமெரிக்காவின் லோமா லிண்டா நகரம், உலகில் மக்கள் நீண்ட காலம் வாழும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய பகுதிகள் ‘நீல மண்டலங்கள்’ (Blue Zones) என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, லோமா லிண்டாவில் வசிக்கும் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களைவிட நீண்ட காலம் வாழ்வதுடன், நல்ல ஆரோக்கியத்தையும் பேணுகின்றனர்..

இந்தச் சமூகத்தினர் பொதுவாக மது அருந்துவதில்லை; காஃபின் உள்ள பானங்களையும் தவிர்க்கின்றனர். பெரும்பாலும் சைவ அல்லது முழுமையான தாவர அடிப்படையிலான உணவுகளையே உட்கொள்கின்றனர். உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பது மதக் கடமைகளில் ஒன்று என அவர்கள் கருதுகின்றனர்.



By admin