பாலு மகேந்திரா எழுத்து, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியானப் படம் மூன்றாம் பிறை. சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் படத்தை தயாரித்திருந்தார், இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் அப்போது மிகப்பெரிய ஹிட்டானது.
இப்படத்தின் ‘கண்ணே கலைமானே’, ‘பொன்மேனி உருகுதே’, ‘பூங்காற்று புதிதானது’ போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திரைப்படம் சிறந்த நடிகர் (கமல்ஹாசன்), சிறந்த ஒளிப்பதிவாளர் (பாலு மகேந்திரா) ஆகிய பிரிவுகளில் தேசிய விருதினையும், தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை (ஸ்ரீதேவி), சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் 44 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, மே.1ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.