• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரோயல் கடற்படை வீரர் கைது: நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

Byadmin

Oct 8, 2026


பெயர் குறிப்பிடப்படாத வெளிநாடு ஒன்றுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் இங்கிலாந்தின் ரோயல் கடற்படை வீரர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெட்ஃபோர்ட்ஷயர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான டெடி யங் என்பவரே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் இக்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த நபர் அந்நிய நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட இரகசியத் தகவல்களைப் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை பெட்ஃபோர்ட்ஷயரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முப்படையைச் சேர்ந்த சேவையிலுள்ள ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகள் இவை என இலண்டன் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸ் பிரிவின் தலைவர் கொமாண்டர் ஹெலன் பிளனகன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பான சாத்தியமான அச்சுறுத்தல்களைக் குறைக்கும் நோக்கில், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போது பாதுகாப்பு அமைச்சுடன் தாம் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

By admin