14
ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் இரண்டாவது வீடு வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு 16,000 பவுண்ட்ஸ் வரை சொத்து வரி விதிக்கும் தீர்மானத்துக்கு நகர சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்தால், இரண்டாவது வீட்டு உரிமையாளர்கள் தற்போது செலுத்தும் சொத்து வரியைவிட சுமார் நான்கு மடங்கு அதிகமான தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
எடின்பரோ நகர சபையின் இந்த முடிவுக்கு சில இரண்டாவது வீட்டு உரிமையாளர்களும் சொத்து நிபுணர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த வரி விதிப்பு நியாயமற்றது என்றும், சொத்து உரிமையாளர்கள் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
எனினும், வீட்டுவசதி தொடர்பான செயற்பாட்டாளர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். அதிகளவு சொத்துகளைக் கொண்ட செல்வந்தர்களால் இந்த கூடுதல் வரியை செலுத்த முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இரண்டாவது வீடுகளை வைத்திருப்பவர்களை அந்த வீடுகளை வாடகைக்கு விடவோ அல்லது விற்பனை செய்யவோ ஊக்குவிப்பதே கூடுதல் வரி விதிப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என லண்டன், எடின்பர்க் மற்றும் கார்டிஃப் பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது வீடுகள் அதிகரிப்பதால் உள்ளூர் மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் ஏற்படும் சிரமத்தை குறைத்து, பயன்பாட்டில் இல்லாத வீடுகளை மீண்டும் குடியிருப்பு சந்தைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.