நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை ஒட்டி டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வியாழக்கிழமை மாலை மேலும் தீவிரமடைந்தது.
இந்த நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் டெல்லியில் அமைந்துள்ள காந்தி சமாதி நோக்கிச் சென்றார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு உயிரிழந்த மாணவர்களுக்கும், போராட்டங்களின் போது காயமடைந்த மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு செல்வதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆலோசனைக்காக ராகுல் காந்தியின் இல்லத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, அவரது இல்லம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த உடனேயே, காந்தி சமாதிக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக ராகுல் காந்தி அறிவித்தார்.
முதலில் இந்தியா கேட் செல்ல விரும்பியதாகவும், ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதனால் தற்போது காந்தி சமாதிக்குச் செல்ல முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், “எங்கள் மாணவர்கள் தெருக்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவர்களுடன் தெருவில் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். அதனால்தான் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.” என்றார்.
மாணவர்களுடன் தாம் இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
“உங்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “தற்போது ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் அமைதியான முறையில் காந்தி சமாதிக்கு சென்று கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவர்களை நினைவுகூரப் போகிறோம். அதேபோல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி அமைதியாக போராடியதற்காக தாக்கப்பட்டு காயமடைந்த மாணவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். இந்திய மாணவர்கள் தனியாக இல்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கோரிக்கைகளுக்கு முழு எதிர்க்கட்சியும் ஆதரவாக இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லம் முன்பாக காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு வந்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அங்கு வந்தார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி தேநீர் அருந்த வருமாறு அழைத்தார். அதற்காகத்தான் வந்துள்ளேன்,” என்று கூறினார்.
பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி “அவர் எதிர்க்கட்சித் தலைவர். நாங்கள் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள். அவரைச் சந்திக்கவே வந்துள்ளோம். ஆனால் அரசு இந்தப் பகுதி முழுவதையும் கோட்டையாக மாற்றியுள்ளது. அரசின் பதற்றத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வந்துள்ளோம். ஆனால் இங்கே அரசின் அச்சத்தைப் பார்க்க முடிகிறது,” என்றார்.
இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு விடுத்துள்ள வேண்டுகோள்களும் அளித்துள்ள உறுதிமொழிகளும் இளைஞர்களிடம் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.