• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

எமது கதைகளைச் சொல்வதால் ஒற்றுமை சீர்குலையும் என்பதே மிகப்பெரும் பாரபட்சம் | தீபச்செல்வன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வி

Byadmin

Jul 17, 2026


நேர்கண்டவர் – நா.தனுஜா

சுங்கத்திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள எனது புத்தகங்களின் உள்ளடக்கங்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலகட்டத்தின் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளும் வகையிலான விடயங்களையே உள்ளடக்கியிருக்கின்றன. எமது நினைவுகளைப் பகிர்வதும், கதைகளைச் சொல்வதும் பிரிவினைத் தூண்டும் என்றும், ஒற்றுமையை சீர்குலைக்கும் என்றும் கூறுவதே ஒரு பாரபட்சமான கையாளுகை அல்லவா? என எழுத்தாளர் தீபச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி முன்னைய அரசாங்கங்களைப் போன்றே தற்போதைய அரசாங்கத்தின் கீழும் படைப்பாளிகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்வது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் அச்சிடப்பட்டு கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஈழத்தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் இரண்டு புத்தகங்கள் சுங்கப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடு அளித்திருக்கும் தீபச்செல்வன், ‘வீரகேசரி’ நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விவகாரம் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:

கேள்வி – உங்களது எந்தெந்தப் புத்தகங்கள் சுங்கப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன?

பதில் – நான் எழுதிய 5 புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் ‘பயங்கரவாதி’ மற்றும் ‘சயனைட்’ ஆகிய நாவல்கள் பிரச்சினைக்குரிய புத்தகங்களாகத் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டன. ‘நடுகல்’ என்ற புத்தகமும் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போதிலும், அது பிரச்சினைக்குரிய புத்தகமாகக் கூறப்படவில்லை. அவை மூன்றும் புனைகதைகள் என்ற வகைப்பாட்டுக்குள் வரக்கூடியவை. தற்போது ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ என்ற நேர்காணல் தொகுப்பும், ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்’ என்ற கட்டுரைப் புத்தகமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி – உங்களது புனைகதை நூல்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், உண்மைச் சம்பவங்கள் அடங்கிய நேர்காணல் தொகுப்பு மற்றும் கட்டுரைப் புத்தகம் என்பன விடுவிக்கப்படவில்லை. எனவே உண்மைச் சம்பவங்கள் இலக்கியப் படைப்பாக மக்களைச் சென்றடைவது குறித்து அரசாங்கம் அச்சம் கொள்கிறது என்ற பொதுவான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இந்தத் தடுத்துவைப்பை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் – புனைகதைகள் உள்ளிட்ட என்னுடைய 4 புத்தகங்களையுமே விடுவிக்கக்கூடாது என்று தான் பாதுகாப்பு அமைச்சு பரிந்துரைத்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சானது புத்தகங்கள், இலக்கியப் படைப்புக்கள் என்பன தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதென்பதே மிக அபத்தமானதொரு செயலாகும். இருப்பினும் என்னுடைய புனைகதை நூல்கள் வெறுமனே கற்பனைச் சம்பவங்களை உள்ளடக்கியவை என்பதனால், அவற்றை விடுவிக்கவேண்டும் என கலைக்கழகம் பரிந்துரை செய்தது. ஆனால் இந்தப் புனைவுகளில் இருக்கக்கூடிய அனுபவங்கள், கதைகளுக்குச் சமாந்தரமானவையாகவே ஏனைய இரண்டு புத்தகங்களிலும் உள்ள விடயங்கள் அமைந்திருக்கின்றன.

ஏனெனில் ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ என்ற நேர்காணல் தொகுப்பைப் பொறுத்தமட்டில், அதில் எனது சிறுபராய நினைவுகள், யுத்தகாலத்தில் நாம் கல்வி பயின்ற அனுபவங்கள், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் நாம் அனுபவித்த துன்பங்கள் என்பன உள்ளடங்கலாக உண்மையாகவே பதிவான நிகழ்வுகளின் வாக்குமூலங்கள் தான் அந்த நூல். அதேபோன்று ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்’ என்ற கட்டுரைப் புத்தகத்தில் அரசியல் அனுமானங்களோ அல்லது எதிர்வுகூறல்களோ இல்லை. மாறாகக் கடந்த காலங்களில் பதிவான அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பே அந்தக் கட்டுரை நூலாகும். அதுமாத்திரமன்றி அதுமாத்திரமன்றி இந்த இரண்டு நூல்களிலும் உள்ள நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகள் இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் ஊடகங்களிலும் இந்தியாவிலுள்ள ‘த இந்து’ மற்றும் ‘ஆனந்த விகடன்’ போன்ற நன்கறியப்பட்ட ஊடகங்களிலும் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. எனவே ஏற்கனவே வெளியான நேர்காணல்கள் அடங்கிய நூலைத் தடுத்துவைத்திருப்பது என்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும்.

கேள்வி – ஏற்கனவே வெளியான நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களைத் தடுத்துவைப்பதன் பின்னணி என்னவாக இருக்குமெனக் கருதுகிறீர்கள்?

பதில் – முதலாவதாக சுங்கத்திணைக்களத்தில் எனது புத்தகங்கள், அவற்றின் அட்டையில் இருந்த படங்கள் மற்றும் எனது பெயர் என்பவற்றைப் பார்த்தே தடுத்துவைக்கப்பட்டன. அன்றைய தினம் அவர்கள் இந்தப் புத்தகங்களை முழுமையாக வாசித்து, அவற்றின் உள்ளடக்கத்தை நன்கு ஆராய்ந்து இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை. மாறாக இது ஒரு தமிழ் நூல் என்ற காரணத்தினாலேயே அதனைத் தடுத்துவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் சுங்கத்திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன இணைந்து அந்தத் தடுத்துவைப்பை நியாயப்படுத்தும் நடவடிக்கைகளைத் தற்போதுவரை முன்னெடுத்துவருகின்றன.

கேள்வி – தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள உங்களது நூல்கள் நாட்டில் பிரிவினையைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

பதில் – எனது நூல்களில் பிரிவினையைத் தூண்டக்கூடிய அல்லது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு விடயமும் இல்லை. மாறாக இந்தப் புத்தகங்களின் உள்ளடக்கங்கள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலகட்டத்தின் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளும் வகையிலான விடயங்களையே உள்ளடக்கியிருக்கின்றன. எமது நினைவுகளைப் பகிர்வதும், கதைகளைச் சொல்வதும் பிரிவினைத் தூண்டும் என்றும், ஒற்றுமையை சீர்குலைக்கும் என்றும் கூறுவதே ஒரு பாரபட்சமான கையாளுகை அல்லவா?

நான் தமிழீழ விடுதலைப்புலிகளைப் பற்றியும், அவ்வியக்கத்தின் தலைவரைப் பற்றியும் பேசுவதாக என்மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஜெனரல் கமால் குணரத்ன அவரது புத்தகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை பற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிறார். ஆனால் நான் அவர் புகழ்ந்த அளவுக்குப் புகழவில்லை. மாறாக அவர் எனது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியிருக்கிறார், விடுதலைப்புலிகள் இயக்கம் மிக ஒழுக்கமானதாக இருந்தது, அக்காலகட்டத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருந்தது என்பன போன்ற விடயங்களையே கூறியிருக்கிறேன். இவை நான் புதிதாகக் கண்டறிந்து சொன்ன விடயங்கள் அல்ல. மாறாக அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயங்களே. ஆனால் போரை நடத்திய இராணுவ உயரதிகாரிகளுக்கு இந்த உண்மைகளைப் பேச உரிமை இருக்கிறது. ஆனால் அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு அவர்களது நினைவுகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது என்பதே நாம் காலங்காலமாக முகங்கொடுத்துவரும் பாரபட்சமாகும்.

நாம் தமிழீழத்தை மறந்திருந்தாலும், இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் அதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. இருப்பினும் நாம் அதுபற்றிப் பேசவில்லை.

கேள்வி – இந்த விவகாரத்தில் கலைக்கழகம் உங்களுக்கு சார்பாக நிற்காமல், அரசாங்கத்தின் பக்கம் நிற்பதாகக் கருதுகிறீர்களா?

பதில் – அவ்வாறானதொரு கரிசனை நிச்சயமாக இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சு நாட்டின் பாதுகாப்பு குறித்தே கவனம் செலுத்தவேண்டும். மாறாக ஒரு படைப்பாளியை நசுக்குவது மற்றும் அவரது படைப்புக்களை ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. படைப்பாளிகள் என்போர் ஒரு சமூகத்தின் குரலாக இருக்கக்கூடியவர்களாவர். எனவே அவர்களை ஒடுக்குவது என்பது இந்நாட்டில் மிகத்தீவிரமான அடக்குமுறையும், ஜனநாயக மறுப்பும், மிகமோசமான மனித உரிமைகள் நிலைவரமும் இருப்பதையே காண்பிக்கிறது. அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பாதுகாப்பு அமைச்சுக்கு சமாந்தரமாகக் கலைக்கழகம் இருப்பது மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும். கலைக்கழகம் என்பது படைப்பாளிகளின் பக்கம் நின்று அவர்களது நியாயத்துக்கும் பாதுகாப்புக்கும் குரல்கொடுக்கவேண்டிய ஒரு அமைப்பாகும். எமக்கும் கலைக்கழகம் மற்றும் சுங்கப்பிரிவு அதிகாரிகளுக்கும் இடையில் கலாசார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்களப் படைப்பாளி ஒருவர், ‘இப்போது எம்முடைய ஆட்சி இருப்பதனால் தீபச்செல்வன் வீட்டுக்குப் போகிறார். இல்லாவிட்டால் அவர் இப்போது சிறைக்குத் தான் சென்றிருப்பார்’ என்று ஒரு கருத்தை முன்வைத்தார். படைப்பாளி ஒருவர், ஒரு பொலிஸாக, இராணுவ சிப்பாயாக மாறி இவ்வாறானதொரு கருத்தைக் கூறுவது மிகப்பெரும் அவலமாகும். இவ்வாறானதொரு அவலத்தை இலங்கையில் மாத்திரம் தான் பார்க்கமுடியும்.

கேள்வி – கடந்தகால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் படைப்பாளிகளுக்கான சுதந்திரம் ஒடுக்கப்படுவதென்பது ஒரே விதமானதாகத் தான் இருக்கிறதா?

பதில் – ஆம், படைப்பாளிகள் மீதான ஒடுக்குமுறை என்பது சகல அரசாங்கங்களின் கீழும் ஒரே விதமானதாக இருப்பதாகவே நான் உணர்கிறேன். கடந்த காலங்களில் படைப்பாளிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய தரப்பினர், இப்போது ஆட்சிபீடமேறி அதே நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது.

நன்றி -வீரகேசரி

By admin