• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

ஒளிப்படக் கலையின் உயிரோட்டம்: சுரேந்திரன் | அ.நிக்ஸன்

Byadmin

Jul 30, 2026


ஈழத் தமிழ் அச்சு ஊடகத்துறையில் சுமார் 40 வருட அனுபவமுள்ள தொழில்முறைப் புகைப்பட ஊடகவியலாளர் (Photojournalist) எஸ். சுரேந்திரன் மறைந்தார் என்பதைவிட, படங்களில் செய்தி சொல்லும் ஓர் ஆவணம் ‘காலமாகிவிட்டது’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்..

கொழும்பில் இருந்து வெளியாகும் பழம்பெரும் பத்திரிகையான வீரகேசரி நாளிதழ் – வீரகேசரி ஞாயிறு வார இதழில், தனது இளமைக் காலத்தில் புகைப்பட ஊடகவியலாளர் பணியை ஆரம்பித்த சுரேந்திரன், 2026 ஜூலை மாதம் மரணமடையும் போது, டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தின் நவீன படக் கலைஞனாகவே விடைபெற்றார்.

ஓய்வு பெற்ற பின்னரும் மரணிக்கும் வரை வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு புகைப்பட ஊடகவியலாளர்.

ஆங்கிலத்தில் ‘Photo’ என்ற சொல் ‘Photon’ (ஒளித்துகள்) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. இதன் பொருள் ‘ஒளி’ (Light) என்பதாகும்.

எனவே, ‘Photography’ என்றால் ‘ஒளியைக் கொண்டு படம் வரைதல்’ (Drawing with light) என்று பொருள்படும்.

பிலிம் கமராவாக இருந்தாலும் சரி, டிஜிட்டல் கமராவாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஒளியைப் பயன்படுத்திதான் படங்களைப் பதிவு செய்கின்றன.

தமிழில் ‘புகைப்படம்’ என்ற சொல் இரசாயனப் புகையைக் குறிப்பது போல, ஆங்கிலத்தில் ‘Photo’ என்ற சொல் புகையைக் குறிப்பதில்லை; அது ஒளியை மாத்திரமே குறிக்கிறது. எனவே, டிஜிட்டல் முறைக்கும் அச்சொல் கனகச்சிதமாகப் பொருந்துகிறது.

இங்கே ‘செய்தி’ தான் முக்கியமே தவிர, தொழில்நுட்பம் அல்ல (Focus on Journalism). ஒரு புகைப்பட ஊடகவியலாளரின் (Photojournalist) முதன்மை வேலை, இரசாயனம் கலப்பதோ அல்லது கமரா தொழில்நுட்பத்தைக் கையாள்வதோ மட்டும் அல்ல; மாறாக, ‘படங்கள் மூலம் செய்தி சொல்வது’ (Storytelling through images) மாத்திரமே.

பிலிம் காலத்திலும் சுரேந்திரன் செய்தியைப் படமாக எடுத்தார்; நவீன டிஜிட்டல் கமராவிலும் அதையேதான் தொடர்ந்தார்.

கருவி மாறினாலும், அவரின் தொழில்முறை நோக்கம் (Journalism) அவர் மரணிக்கும் வரை மாறவில்லை.

படத்தின் ஊடாகச் செய்தியைச் சொல்லும் கலைத்துவமான முறைமையில், அன்றும் இன்றும் சுரேந்திரன் தனது ஊடக வகிபாகத்தை காலத்திற்குப் பொருத்தமான வழியில் நகர்த்தியிருந்தார்.

சுரேந்திரன் மாத்திரமல்ல, இவருடன் சமகாலத்தில் புகைப்பட ஊடகவியலாளர்களாக பணியாற்றிய ஜோய் ஜெயக்குமார், அமரர் அன்டன் மோசஸ், சுகாஸ் ஆகியோரும் அன்று அவ்வாறுதான் மாற்றமடைந்தனர்.

இதற்குப் பிரதான ஊக்கக் காரணியாக இருந்தவர், வீரகேசரியின் நிர்வாக இயக்குநர் திரு. குமார் நடேசன்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இன்று வரை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் குமார் நடேசன், தமிழ் அச்சு ஊடகத்துறையில் மட்டுமல்லாமல், இலங்கைத் தீவின் சிங்கள, ஆங்கில ஊடகத்துறைகளும் நவீன முறைகளில் தங்களை மாற்றிக் கொள்வதற்கான தூண்டுதலாக இருந்தவர்.

இப்பின்னணியில், சுரேந்திரனின் புகைப்பட அனுபவமும், ஏனைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் பணியாற்றிய செய்தியாளர்கள், புகைப்பட ஊடகவியலாளரகள் ஆகியோரின் தொடர்பாடல் முறைமையும் ஆர்வமும் வீரகேசரி நிறுவனத்திற்குப் பெரும் சொத்தாகவும், வெவ்வேறு புதிய மாற்றங்களுக்கான காரண – காரியங்களாகவும் அமைந்திருந்தன.

2003 ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட்டது.

அந்த மலரில் ‘புகைப்பட ஊடகவியலாளர்’ (Photojournalist) என்று நாங்கள் குறிப்பிட்டபோது, அதனை அன்று ஏற்பதற்குச் சிலர் தயங்கினர்.

ஆனால், ‘Photojournalist’ என்றுதான் வர வேண்டும் என நாங்கள் அச்சு ஊடக மரபு முறைகள் குறித்து விளக்கமளித்தபோது, அதனை நிர்வாக இயக்குநர் குமார் நடேசன் ஏற்றுக்கொண்டார்.

ஏனெனில், புதிய மாற்றங்களை, அதுவும் தொழில்முறைத் தகுதிக்குரிய (Professionalism) மொழிப் பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் குமார் நடேசன் அப்போது ஆர்வமாக இருந்தார்.

சர்வதேச அளவில் ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விருதுகள் அனைத்தும் இன்றும் இதே சொல்லையே பயன்படுத்துகின்றன.

இதனால், உலகளாவிய புரிதலுக்காக (Global Identity) அச்சு ஊடகங்கள் இன்றும் தங்களின் பணியாளர்களை “Photojournalists” என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கின்றன.

‘Photojournalist’ என்ற இந்த மாற்றத்தை சுரேந்திரன் உட்பட வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றிய புகைப்பட ஊடகவியலாளர்கள் அனைவரும் அன்று விரும்பி ஏற்றனர்.

”படங்களின் ஊடாகச் செய்தியைச் சொல்லி வரும் எங்களுக்கு உரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்” என்று அப்போது சுரேந்திரன் பெருமையாகக் கூறியிருந்தார்.

2001 ஆம் ஆண்டுக்குப் பின்னரான டிஜிட்டல் புகைப்பட ஊடகவியலாளர்கள் கமராவில் படம் எடுப்பதோடு மாத்திரம் தங்களை நிறுத்திக் கொள்வதில்லை, கணினியில் எடிட்டிங் (Editing), கலர் கிரேடிங் (Color Grading), டிஜிட்டல் மனிபுலேஷன் (Digital Manipulation) எனப் பல கலைத்துவமான வேலைகளைச் செய்கிறார்கள்.

ஆகவே, அவர்களை ‘டிஜிட்டல் படக் கலைஞர்’ அல்லது சுருக்கமாக ‘படக் கலைஞர்’ என்று அழைப்பதோடு, ‘புகைப்பட ஊடகவியலாளர்கள்’ என அடையாளப்படுத்துவதும் முற்றிலும் அர்த்தமுள்ள ஒரு திருத்தமாகும்.

(சமுதாயத்தில் இன்னும் ‘புகைப்படக் கலைஞர்’ என்ற சொல் ஆழமாகப் பதிந்துள்ளதால், இரண்டு சொற்களுமே ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக உள்ளன).

பிலிம் றோல் (Film Roll) முறையில் எடுக்கப்படும் படங்கள் மென்மையான, இயற்கையான வண்ணங்களைக் கொண்டிருக்கும். பிலிம்களில் உள்ள ‘கிரெய்ன்ஸ்’ (Film Grain) படங்களுக்கு ஒரு கலை நயத்தைத் தரும்.

2001ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்படங்களைக் கழுவுவதற்காக கொழும்பு 02 இல் உள்ள ‘சலாக்கா’ (Salaka) நிறுவனத்திற்கு அனைத்துப் புகைப்பட ஊடகவியலாளர்களும் செல்வது வழக்கம்.

அக்காலத்தில் சலாக்கா நிறுவன வட்டாரத்தில் சுரேந்திரன் மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.

ஏனெனில், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால் அந்த இடத்திற்கு உடனடியாகச் சென்று துணிவுடன் படம் எடுப்பவர் சுரேந்திரன்.

சில சமயங்களில் ஏனைய நாளிதழ்களில் பணிபுரியும் புகைப்பட ஊடகவியலாளர்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், அவர்கள் சலாக்கா நிறுவனத்திற்கு வந்து சுரேந்திரனிடம் படங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள்.

அக்காலத்தில் பத்திரிகை நிறுவனங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் படங்களைப் பரிமாறி ஊடகத்துறை நட்பைப் பேணிக் கொள்ளும் பண்பு வழக்கமாக இருந்தது.

இத் தொடர்பாடல் பண்பு சுரேந்திரனிடம் இருந்தது.

அதேநேரம், அக்காலத்தில் பிலிம் றோல் (Film Roll) ஊடான வர்ணப் படங்கள் வருவதற்கு முன்னர் கறுப்பு-வெள்ளைப் படங்கள் மாத்திரமே இருந்தன.

கறுப்பு – வெள்ளைப் படங்களில் அவற்றின் நிழல்களும் ஒளியும் (Dynamic Range) மிக ஆழமாக வெளிப்படும் வகையில், அவற்றைக் கழுவும் கலைக்கூடம் வீரகேசரியின் அப்போதைய ஆசிரிய பீடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கும் சுரேந்திரன் செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தார்.

பிலிம் றோல் காலத்திற்கு முன்னரும் சரி, டிஜிட்டல் காலத்திற்குப் பின்னரும் சரி, புகைப்பட ஊடகவியலாளர்களுக்கும், திருமணம் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளைப் படம் பிடிப்பவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.

குறிப்பாக, புகைப்பட ஊடகவியலாளர்கள், தங்கள் கண்களால் காட்சிகளை அவதானித்து உயிரோட்டமான அசைவுகளோடு படங்களை எடுக்க வேண்டும்.

ஆனால், திருமணப் படப்பிடிப்பாளர்கள் சம்பந்தப்பட்டவர்களை வெவ்வேறு கோணங்களில் நிற்கவைத்தும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகளை அழகுபடுத்தியும், முகங்களுக்கு ஒப்பனை செய்தும் படம் எடுக்க முடியும்; அதாவது அங்கு ஒரு  செயற்கைத்தன்மை இருக்கும்.

செய்திப் படங்களை எடுக்கும் புகைப்பட ஊடகவியலாளர்கள், இயல்பாகவும், தாங்கள் படம் பிடிக்கப்படுகிறோம் என்று சம்பந்தப்பட்டவர்கள் அறியாத முறையிலும், இயங்கு தன்மையோடும் படங்களை எடுக்க வேண்டும்.

அத்துடன், ஆசிரியபீட பத்திரிகையாளர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் பிரதம ஆசிரியரின் வியூகங்கள், சிந்தனைகள் போன்றவற்றை உணர்ந்தும் ஒரு புகைப்பட ஊடகவியலாளர் படங்களை எடுக்க முடியும்.

ஆகவே, இயற்கையான, உயிரோட்டமான பொறுப்பு அவர்களுக்கு அதிகம் உண்டு. சுரேந்திரன் ஆசிரிய பீடத்தின் அந்த உணர்வுகளை நன்கு புரிந்து, படங்களை எடுத்துக் கொண்டு வருவார்.

ஆகவே, இத்தகைய பண்பு கொண்ட அதுவும் போர்க்காலப் படங்களை ஈழத்தமிழர்களின் உணர்வு சார்ந்து தனது கமராவுக்குள் பதிவு செய்து கொண்ட சுரேந்திரன் மரணமடைந்த செய்தி, தமிழ் அச்சு ஊடகத்துறை, தமிழ் இலக்கியத்துறைகளுக்கு மாத்திரமல்ல, ஈழத்தமிழ் ஆவணக் காப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவர் ஆரம்பகாலம் முதல் மரணிக்கும் வரை பயன்படுத்திய கமராக்களுக்குள், பிரசுரமாகாத ஏராளமான படங்கள் இன்னும் இருக்கின்றன.

அந்தப் படங்கள் எதுவும் எந்தவொரு இடத்திலுமே ஆவணப்படுத்தப்பட்டதாக நான் அறியவில்லை.

ஆகவே, சுரேந்திரனுடன் ஆரம்பம் முதல் அவர் மரணிக்கும் வரையான சமகாலத்திலும் இணைந்து பணியாற்றிவரும் புகைப்பட ஊடகத்துறையின் மூத்த, அனுபவம் வாய்ந்த அண்ணன் ஜோய் ஜெயக்குமார், இவ்விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே பலருடைய தாழ்மையான எதிர்பார்ப்பாகும்.

இதற்கு வீரகேசரி நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதும் தாழ்மையான வேண்டுகோள்.

அதேநேரம், 40 ஆண்டுகள் பணியாற்றிய சுரேந்திரனின் மரணச் செய்தி, வீரகேசரியின் இரண்டாம் பக்கத்தில், அதுவும் வெறுமனே ‘படப்பிடிப்பாளர் சுரேந்திரன் காலமானார்’ என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

செய்தி உள்ளடகத்தில், அவர் பற்றிய விரிவான தகவல்கள் சொல்லப்படவுமில்லை.

அச்சு ஊடகம் ஒன்றின் ஆசிரியபீடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றிய அல்லது பணியாற்றிக் கொண்டிருக்கும் எவரேனும் மரணமடைந்தால், அப்பத்திரிகை தனது முன்பக்கத்தில் செய்தி பிரசுரிப்பதே வழமையாகும்;

சிங்கள, ஆங்கில நாளிதழ்களில் இப்பண்பைக் காண முடியும். சுரேந்திரன் மரணமடைந்த செய்தியை, அரச தமிழ் அச்சு ஊடகமான ”தினகரன்” மற்றும் தனியார் அச்சு ஊடகமான “தமிழன்” ஆகிய பத்திரிகைகள் முன்பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றன.

அத்துடன், ‘புகைப்பட ஊடகவியலாளர்’ என்ற உரிய கலைச் சொல்லையும் தமது செய்திகளில் பயன்படுத்தியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்வொன்றில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ‘புகைப்பட ஊடகவியலாளர்’ என்ற பொருத்தமான சொல்லைப் பயன்படுத்தியிருந்தது.

அந்த உரிய கலைச் சொல் மொழிப் பயன்பாட்டை வீரகேசரியின் தற்போதைய ஆசிரியபீடம் ஏன் தவிர்த்தது?

இரண்டாம் பக்கத்தில் ஏன் செய்தி வெளியிடப்பட்டது?

இக்கேள்விகளைக் கடந்து, இச்செயல் மன்னிக்க முடியாத ஒரு குற்றம் என்பதை ஆசிரியபீடம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இச்செய்தி பிரசுரமான முறைமை, தற்போது ஆசிரியபீடத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள், புகைப்பட ஊடகவியலாளர்கள் அனைவரினதும் மனதில் வெறுப்பையும், நம்பிக்கையீனத்தையும் உருவாக்கும்.

இதற்கு வீரகேசரி நிறுவனம் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதல்ல, மாறாகப் பிரதம ஆசிரியரே பதிலளிக்க வேண்டும்.

எந்தவொரு தொழில் துறையிலும் முரண்பாடுகள், போட்டி பொறாமைகள் மற்றும் புலமைக்காய்ச்சல்கள் இருப்பது இயல்பானது. ஒவ்வொருவருடைய தகுதி, தராதரத்திற்கு ஏற்ப அவை தோன்றி மறையும்.

ஆனால், ஒருவருடைய மரணத்தின்போது அவருக்கு வழங்க வேண்டிய பொருத்தமான இறுதி மரியாதையைச் செலுத்த வேண்டிய பண்பு எல்லாரிடமும் இருக்க வேண்டும்.

அதுவும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இப்பண்பு, அறத்தின் பாற்பட்ட ஓர் ஒழுக்கமாக மாற வேண்டும்.

மரணமென்பது எந்த வயதிலும் வரலாம்; ஆனாலும், சுரேந்திரன் 68 வயதில் மரணித்தார் என்பதைப் பலருடைய மனம் ஏற்க மறுக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக அவர் ஒரு கொடிய நோய்க்கு ஆளாகியிருந்தார். குடும்பத்தைப் பற்றிய அவரது கவலையும், தனிமையான வாழ்க்கை முறையுமே அவரை இத்தகைய கொடிய நோய்க்கு உள்ளாக்கியதா என்ற கேள்வி, அவரை மிக நெருக்கமாக அறிந்த ஊடகத்துறை நண்பர்களிடம் எழாமல் இல்லை.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

The post ஒளிப்படக் கலையின் உயிரோட்டம்: சுரேந்திரன் | அ.நிக்ஸன் appeared first on Vanakkam London.

By admin