• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

Byadmin

Jul 21, 2026


இலங்கையின் அதிவேக ஓட்ட வீரரும், சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்த தடகள நட்சத்திரமுமான யுபுன் அபேகோன் தடகள விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நாட்டிற்கு நான் எந்தக் கடனும் பட்டிருக்கவில்லை. ஆனால் உலகிற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டவனாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது தடகளப் பயணத்தில் உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்கள், இலங்கை இராணுவம், இலங்கையின் மெய்வல்லுனர்கள், இத்தாலியில் தனது பயிற்சிக் குழு, அனுசரணையாளர்கள் மற்றும் தன்னை ஆதரித்த இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டிற்கு பெருமை சேர்த்தது தனது வாழ்க்கையின் மிகப் பெரிய கௌரவம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் போட்டியிடும் திறன் இருந்தபோதிலும் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவுக்கான உண்மையான காரணங்களையும், தற்போதைய இலங்கை தடகள விளையாட்டின் நிலைமை தொடர்பான தனது அனுபவங்களையும் தனது அடுத்த கட்ட பயணத்தில் வெளிப்படுத்துவதாக யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.

100 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் தேசிய சாதனையாளராகவும், தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த யுபுன் அபேகோனின் ஓய்வு அறிவிப்பு, இலங்கை விளையாட்டுத் துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, விளையாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சமூக ஊடகங்கள் வழியாக அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

By admin