• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை | தொழிற்சங்க போராட்டம்

Byadmin

Nov 14, 2026


கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் சுமார் 120 தாதியர் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறைக்கு அதிகாரிகள் உடனடித் தீர்வு வழங்கத் தவறினால், எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் எச்சரித்துள்ளது.

நோயாளர் பராமரிப்பு சேவைகளைப் பாதித்துள்ள தாதியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, இன்று (13) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை வைத்தியசாலை வளாகத்தில் தாதியர் உத்தியோகத்தர்கள் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையில் தற்போது சுமார் 370 தாதியர் உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமையாற்றுவதாகவும், சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க மேலதிகமாக 120 தாதியர்கள் அவசியம் எனவும் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்தப் பற்றாக்குறையினால் ஒரு தாதியர் மூன்று தாதியர்களின் பணியைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் கடும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் குறித்து மாகாண சுகாதார அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில், புதிய நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் ஊடாக வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு கோரி மேல் மாகாண சுகாதாரச் செயலாளருக்குச் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்வரும் நாட்களில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்திற்குச் செல்ல நேரிடும் எனச் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

By admin