4
இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான கஸ்தூரிராஜா முதன்மையான வேடத்தில் தோன்றும் ‘ஹபீபி’ எனும் தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கு பற்றிய முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தில் ஈஷா, கஸ்தூரிராஜா, மாளவிகா மனோஜ், தனா ஸ்ரீ சுதாகரன், அருண்குமார் ,அனு ஸ்ரேயா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
மத நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்களின் வாழ்வியல் பின்னணியில் காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் – நேசம் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் – ஜி கே எஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் – ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தின் தென் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்களின் எதார்த்த வாழ்வியல் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது… ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதனிடையே ஹபீபி என்றால்.. அரபு மொழியில் பரவலாக பாவிக்கப்படும் பாசத்திற்குரிய சொல் என்றும், இதற்கு தனது காதலனை காதலுடன் குறிக்கும் ‘என் அன்பானவரே’ என பொருள்படும் என்றும் படக்குழுவினர் விவரித்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன் -ராம் -சேரன் -அமீர்- பா. ரஞ்சித் – சமுத்திரக்கனி- மிஷ்கின் -ரஞ்சித் ஜெயக்கொடி -சுசீந்திரன் -தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா- மலையாள திரைப்பட இயக்குநர் ஜக்கரியா – உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந் நிகழ்வில் பங்கு பற்றி பேசிய அனைத்து பிரபலங்களும் ‘ஹபீபி ‘ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் ஈரானிய திரைப்படத்தை போன்றும், தமிழக மண்ணில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்வியலை நெருக்கமாக படப்பிடித்து காட்டி இருக்கிறது என்றும், இந்தத் திரைப்படத்திற்கு பல விருதுகள் கிடைக்கும் என்றும் பாராட்டினர்.