மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான்.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் இக்பால், கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வருகிறார்.
தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் தனது உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாகவும், ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொண்டதைப் போல உணர்வதாகவும் கூறுகிறார். இதனால் குளத்திலிருந்து வெளியேவர மறுத்து தொடர்ந்து தண்ணீரிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
உடல் பருமனாக இருக்கும் இக்பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்களில் மிதந்தபடி காணப்படுகிறார். சில நேரங்களில் ஒரு குளத்திலிருந்து மற்றொரு நீர்நிலைக்கும் அவர் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் உடல்நிலை குறித்து கவலை அடைந்துள்ள அவரது பெற்றோர், ஏற்கெனவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், நீண்டகால சிகிச்சைக்கான செலவை தங்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீண்ட நாட்களாக தண்ணீரில் இருந்ததால் இக்பாலின் கை, கால்களில் உள்ள தோல் வெளிறிய நிலையில் காணப்படுகிறது. இருப்பினும், அவர் தண்ணீரை விட்டு வெளியே வர தொடர்ந்து மறுத்து வருகிறார்.
நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதால் தோல் மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இக்பாலுக்கு விரைவில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post குளத்து தண்ணீரிலேயே இரவு பகலாக வாழும் 16 வயது சிறுவன் appeared first on Vanakkam London.