8
அவுஸ்திரேலியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், சுடுநீரில் குளித்தபோது வெளியேறிய நீராவி காரணமாகத் தீ எச்சரிக்கை அலாரம் இயங்கியதால், அவருக்குத் தீயணைப்புத் திணைக்களத்தால் பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாமிகா என்ற அந்தப் பெண் தனது தொடர்மாடி வீட்டில் உள்ள குளியலறையில் வெளியேற்றும் விசிறியை (Exhaust Fan) இயக்காமல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே சுடுநீரில் நீராடியுள்ளார். இதன்போது குளியலறையிலிருந்து வெளியேறிய நீராவிப் புகை, அருகிலிருந்த தீ எச்சரிக்கை அலாரத்தைத் தூண்டியதால் அபாய ஒலி தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
அலாரம் ஒலித்த சில நிமிடங்களிலேயே கட்டட முகாமையாளர் கதவைத் தட்டியபோது, அது தீயணைப்புத் துறையினரின் வழக்கமான அவசர கால ஒத்திகை என வாமிகா நினைத்துள்ளார். எனினும், தனது குளியலறையிலிருந்து பரவிய நீராவியே அலாரம் இயங்குவதற்குக் காரணம் என்பதையும், இதனால் விசேட தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர் என்பதையும் பின்னரே அவர் அறிந்துகொண்டார்.
உண்மையான தீ விபத்து எதுவும் ஏற்படாத போதிலும், தவறான அலாரத்தின் ஊடாகத் தீயணைப்புப் பிரிவினரை வரவழைத்ததற்கான சேவைக் கட்டணமாக 1,800 அவுஸ்திரேலிய டொலர்களைச் செலுத்துமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பெறுமதி இந்திய ரூபாயில் சுமார் ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ரூபாவாகும்.
ஐந்து நிமிடங்கள் குளித்தமைக்காக இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்ட விநோத அனுபவத்தை வாமிகா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, குளியலறைக்கு அருகாமையில் உணர் அலாரங்களைப் பொருத்துவது முறையற்றது எனவும், முதன்முறை நிகழ்ந்த எதிர்பாராத இத்தவறுக்கு இத்தகைய அபராதம் அறவிடுவது அநீதியானது எனவும் இணைய பயனர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.